“சிங்கப்பெண் படையில் திருநங்கைகளுக்கும் பணி வாய்ப்பு வழங்குக”
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கும் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா பேசியது: “காவல் துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 9,129 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதுடன் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதல் காவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும். இதனால், அவர்களின் மன அழுத்தம் குறையும். அதன்மூலம் அவர்கள் சிறப்பாக பணியாற்றுவர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அதில் திருநங்கைகளுக்கும் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு வேலையும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.
ஊர்க்காவல் படையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. வாழ்க்கை செலவினங்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காவலர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவுப்படியை ரூ.300-லிருந்து ரூ.500 ஆகவும், மாதாந்திர இடர்படியை ரூ.1000-லிருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்” என்று பிரேமலதா பேசினார்.