சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய மாணவர்கள்
சிங்கப்பூர்ப் பயணத்தின் முதல் சில நாள்களில், பிரார்தனா சுப்பிரமணியன், எம்.ஏ. அஃபான் இருவரும் என்டியுசி (NTUC) என்பது பேரங்காடியன்று, சிங்கப்பூரின் தொழிற்சங்கம் எனத் தெரிந்துகொண்டனர்.
சிங்கப்பூர்-இந்தியப் பங்காளித்துவ அறநிறுவனம் முன்னெடுத்த 10 நாள் அனுபவத் திட்டத்தின் பகுதியாக, இந்திய மாணவர் குழுவினர் சிங்கப்பூருக்கு வருகையளித்தனர்.
சிங்கப்பூரில் அரசாங்கம், கல்வி, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள அக்குழு வருகையளித்திருந்தது.
இதேபோல, இவ்வாண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூர் மாணவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வர்.
இந்தப் பத்து நாள்களில், அந்த மாணவர்கள் தேசிய அரும்பொருளகம், முஸ்தஃபா சென்டர் கடைத்தொகுதி, மரீனா அணைக்கட்டு ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘யு-டவுன்’ வளாகத்தில் தங்கியிருந்த அம்மாணவர்கள், நாட்டின் நிர்வாக இயக்கம் குறித்த விரிவான புரிதலைப் பெறும் நோக்கில், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் அலுவலகத்திற்கும் சென்றனர்.
‘டாட்டா கன்சல்டன்சி சிங்கப்பூர்’ நிறுவனத்தைப் பார்வையிட்டதும், அங்குள்ள வேலைப் பயிற்சி மாணவர்களிடம், அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததும் சிறந்த அனுபவமாக அமைந்ததாகச் சொன்னார் புனே நகரின் விஸ்வகர்மா பல்கலைக்கழக கணினி அறிவியல், பொறியியல் துறை மாணவர் அஃபான்.
தனது பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவராகவும் ‘ஹேக்கத்தான்’ போட்டிகளில் பங்கேற்பவருமான அஃபான், சிங்கப்பூரின் கொள்கைகள் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதையறிந்து வியப்படைந்ததாகவும் சொன்னார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சென்னைப் பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி மாணவி பிரார்தனா, டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளக் குழுவுடன் மேற்கொண்ட உரையாடல்கள்மூலம் தாம் மேற்கொள்ளும் படிப்பு தமக்கு ஏற்றதுதானா எனும் கேள்வியை எழுப்பியதாகக் குறிப்பிட்டார்.
“சரியான நேரத்தில் சிங்கப்பூருக்கு வந்து இந்த அனுபவத்தைப் பெற்றது சிறப்பு. உளவியல் உள்ளிட்ட பிற கலைப்படிப்புகளில் சிறந்து விளங்கும் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்றும் அவர் சொன்னார்.
தங்களின் பயணத்தின் இறுதி நாளுக்கு முன்பாக, செய்தியறைச் செயல்பாடுகளை நேரில் காண, அம்மாணவர்கள் எஸ்பிஎச் மீடியா அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தமிழ் முரசு, ‘தப்லா!’ அலுவலகங்களுக்கு வந்த அவர்கள் செய்தியாளர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் செய்திச் சேகரிப்பு குறித்துக் கேட்டறிந்தனர்.