சிறிய உதவி, ஆழமான தாக்கம்: பிறர் வாழ்வில் வெளிச்சமேற்றும் இளையர்
ஒருவர் செய்யும் சின்னஞ்சிறிய உதவிகள் கூட, மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்பதைத் தனது செயல்களின் மூலம் உணர்த்தி வருகிறார் கவின் தேவராஜ், 21.
பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மனநிறைவே இவரைத் தொடர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட வைக்கிறது. ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவிட நினைத்த கவின், 2023ல் சிண்டாவின் ‘புக் விஸர்ட்ஸ்’ (Book Wizards) திட்டத்தில் ஒரு தொண்டூழியராக இணைந்தார்.
‘புக் விஸர்ட்ஸ்’ என்பது நான்கு முதல் ஏழு வயது வரையிலான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்புத் திறனை வளர்த்துவதற்காக சிண்டாவால் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இருபது வாரங்கள் நடைபெறும் அத்திட்டத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் வழிகாட்டப்படுகிறார்கள்.
2024ஆம் ஆண்டில் ஜூன் முதல் நவம்பர் வரை, அப்போது ஐந்து வயதான ஆதவனுக்கு வழிகாட்டியாக கவின் நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூரின் முக்கிய இடங்களான ரிவர் வொண்டர்ஸ், சைனாடவுன், கரையோரப் பூந்தோட்டங்கள் போன்ற இடங்களை மையமாகக் கொண்ட கதைப் புத்தகங்கள் மூலம் இலக்கணம், வாக்கிய அமைப்பு போன்றவற்றை இவர் கற்றுக்கொடுத்தார்.
“ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும்போது, அவர்களின் நடைமுறைகளை அறிந்து அவர்களுக்குப் பிடித்தமான வழியில் கற்றுக் கொடுக்கவேண்டும்,” என்றார் கவின்.
ஆதவனின் கற்றல் தேவைகளைப் புரிந்துகொண்ட கவின், அவருக்கேற்ப பாடங்களை வகுத்தார். ஆதவனின் தமிழ் ஆற்றலை அறிந்து, தமிழ் மூலமாக ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்க இவர் ஆரம்பித்தார்.
ஆதவனுக்கு ‘ர’ என்ற எழுத்தை உச்சரிப்பதில் சிரமம் நிலவியபோது, கவின் தனது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தி அவருக்கு ஆங்கில உச்சரிப்புகளை எளிதாகப் புரிய வைத்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அந்தத் தனித்துவமான கற்பித்தல் முறைக்கு கவினின் தாயாரே தூண்டுகோலாக இருந்தார். கவின் தனது சிறுவயதில் தமிழ் மொழியில் தடுமாறியபோது, இவரின் தாயார் வழக்கமான பாடங்களுக்குப் பதிலாக, ‘உன்னை அறிந்தால்', ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ போன்ற அர்த்தமுள்ள தமிழ்ப் பாடல்கள் மூலம் இவருக்குத் தமிழை அழகாகக் கற்றுக்கொடுத்தார். அந்த சுவாரசியமான அணுகுமுறையையே ஆதவனுக்கும் கவின் பயன்படுத்தினார்.
“எத்தனை தவறுகள் செய்தாலும் ஆசிரியர் கவின் என்மீது கோபம் கொள்ளாமல் என்னைத் திருத்தி சரியான பதிலளிக்க சொல்லிக்கொடுப்பார். எனக்கு அதிகமான ஊக்கமளிப்பார்,” என்று ஆதவன் கவினை போற்றிப் பேசினார்.
தற்போது தேசிய சேவையில் இருக்கும் கவின், தனது ஓய்வு நேரத்திலும் தன்னார்வப் பணிகளை நிறுத்தவில்லை. மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் தொண்டூழியராக உள்ளார்.
அங்கு தனியாக வருவோர்க்குத் தண்ணீரும் போர்வைகளும் வழங்குவது, அவர்களிடம் அன்பாகப் பேசுவது என அவர்களுக்குப் பல உதவிகளை செய்து வருகிறார்.