📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 16, 2026 03:30 AM

சிங்பாஸ் பயனர்களுக்குப் புதிய ‘பாஸ்கீ’ வசதி அறிமுகம்

சிங்பாஸ் பயனர்களுக்குப் புதிய ‘பாஸ்கீ’ வசதி அறிமுகம்

சிங்கப்பூரில் இணைய மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு புதிய ‘பாஸ்கீ’ எனும் உள்நுழைவு வசதியை அறிவித்துள்ளது.

இது, ‘ஃபிஷிங்’ போன்ற மோசடிகளுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வசதி புதன்கிழமை (ஜூலை 1) காலை 10 மணிக்கு நடப்புக்கு வருகிறது.

முதல் கட்டமாக ஐஃபோன் பயனர்கள் தங்களது கைப்பேசி உலாவி வழியாக உள்நுழையும்போது இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கணினி உலாவி வழியாக உள்நுழைவோருக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகமாகும்.

ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கியூஆர் குறியீட்டு உள்நுழைவு, முகம் சரிபார்ப்பு, குறுஞ்செய்தி ஒருமுறை கடவுச்சொல் ஆகிய வசதிகள் தொடர்ந்து இடம்பெறும்.

பயனர்கள் தங்களது சிங்பாஸ் செயலியைப் புதுப்பித்து, முகப்புப் பக்கத்தில் புதிய வசதியை எளிதாகப் பெறலாம்.

புதிய வசதி செயல்படும் முறை

இந்த வசதி, பயனரின் சிங்பாஸ் கணக்கிற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் திறவுகோலாகும். இதை இரு பாதிகளாகப் பிரித்துச் செயல்படும் தொழில்நுட்பமாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு பாதி, பயனரின் கைப்பேசியில் பாதுகாப்பாக இருக்கும் வேளையில், மற்றொரு பாதியை சிங்பாஸ் கட்டமைப்பு வைத்திருக்கும். இரு பாதிகளும் சரியாகப் பொருந்தினால் மட்டுமே சிங்பாஸ் கணக்கிற்குள் நுழைய முடியும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பயனரின் தனிப்பட்ட திறவுகோல் எந்தக் கட்டத்திலும் கைப்பேசியை விட்டு வெளியேறாது. இதில் கடவுச்சொற்களோ, ஒருமுறை பயன்படும் கடவுச்சொற்களோ கிடையாது.

இதனால் மோசடிக்காரர்கள் போலியான இணையத்தளங்களை உருவாக்கி பயனர்களை ஏமாற்ற நினைத்தாலும் அவர்களிடம் சிக்கிக்கொள்ள எந்தத் தகவலும் இருக்காது.

கருவிகளின் அருகாமை உறுதிப்பாடு

இந்த வசதியின் மற்றொரு முக்கியச் சிறப்பம்சம், கருவிகள் அருகில் இருக்கும் தன்மையை உறுதிசெய்யும் தொழில்நுட்பம்.

பயனரின் கைப்பேசியிலேயே சிங்பாஸ் கணக்கிற்குள் உள்நுழையும்போது அவரது சிறப்புக் குறியீடு அந்தக் கருவியில் பாதுகாப்பாக உள்ளதா என்பதை சிங்பாஸ் கட்டமைப்பு முதலில் சரிபார்க்கும்.

அதன்பின் பயனர்கள் தங்களது கைரேகை, முகம் சரிபார்ப்பு, ஆறு இலக்கக் கடவுக்குறியீடு ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி எளிதாக உள்நுழையலாம்.

மடிக்கணினி வழியாக உள்நுழையும்போது திரையில் ஒரு கியூஆர் குறியீடு தோன்றும். அதைக் கைப்பேசியால் வருடியதும், புளூடூத் தொழில்நுட்பம் மூலம் கைப்பேசி அந்த மடிக்கணினிக்கு அருகில் உள்ளதா என்பது சரிபார்க்கப்படும்.

இந்தக் குறுகிய தூர அருகாமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே செயலியில் உள்நுழைய முடியும். தொலைதூரத்திலிருந்து மோசடிக்காரர்கள் கணக்கை அணுகுவதை இது தடுக்கிறது.

மோசடிகளைக் குறைக்கும் திட்டம்

2025ல் சிங்கப்பூரில் நடந்த மோசடிகளில் ‘ஃபிஷிங்’ மோசடிகள் இரண்டாவது இடத்தை வகித்தன. இதன்வழி கிட்டத்தட்ட $39.9 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

அண்மைக் காலங்களில் பலர் தங்களது சிங்பாஸ் விவரங்களைப் பணத்திற்காக மோசடிக் கும்பல்களுக்கு விற்றுள்ளனர். இதன்வழி போலி நிறுவனங்களை உருவாக்குவது, சட்டவிரோத வேலை அனுமதிப் பத்திரங்களைப் பெறுவது, பல மில்லியன் வெள்ளியைக் கள்ளப்பணத்திலிருந்து நல்ல பணமாக மாற்றுவது போன்ற குற்றச்செயல்களில் பல கும்பல்கள் ஈடுபட்டுள்ளன.

புதிய ‘பாஸ்கீ’ வசதி இத்தகைய இணையக் குற்றங்களைக் கணிசமாகக் குறைக்கும்.

ஒருவேளை கைப்பேசி தொலைந்துவிட்டாலோ திருடப்பட்டாலோ மற்றொரு கைப்பேசியில் சிங்பாஸ் செயலியைப் பதிவு செய்யும்போது பழைய கருவியில் உள்ள வசதி தானாகவே செயலிழந்துவிடும். இதன்வழி பயனர்கள் தங்கள் மின்னிலக்க அடையாளத்தின் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருக்கலாம்.

“பரிவர்த்தனைகளின்போது பயனர்களுக்கு மன அமைதியை வழங்கும் நம்பகமான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய தேசிய மின்னிலக்க அடையாளமாகச் சிங்பாசை மாற்றுவதில் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு உறுதியாக உள்ளது,” என்று அமைப்பின் சிங்பாஸ் மின்னிலக்க அடையாள மூத்த இயக்குநர் வின்ஸ்டன் டியோ குறிப்பிட்டார்.

இணையச் சேவைகளைப் பாதுகாப்பாக்கும் அதே வேளையில் அதன் பயன்பாட்டு எளிமை குறையாதவாறு இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.