📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 09, 2026 07:33 AM

இந்திய வீரர்களை துரத்தும் காயம்: சாய் சுதர்சன் விலகல்

இந்திய வீரர்களை துரத்தும் காயம்: சாய் சுதர்சன் விலகல்

பெங்களூரு: இந்திய அணியின் பும்ரா, சாய் சுதர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். இது பற்றி பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா, லட்சுமண் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 'வேகப்புயல்' பும்ரா, காயம் காரணமாக விலகினார். இவரது இடது முழங்கால் பகுதியில் வீக்கம் குறையாததால், உடற்தகுதி பெற முடியவில்லை. காஷ்மீர் வீரர் அகிப் நபி சேர்க்கப்பட்டார்.

சாய் சுதர்சன் விலகல்: இலங்கை தொடரில் இருந்து தமிழக பேட்டர் சாய் சுதர்சனும் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இவரது வலது கால் பெருவிரலில் இன்னும் வலி உள்ளது. பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''டெஸ்டில் களமிறங்க சுதர்சனுக்கு சிறிது காலம் தேவைப்படலாம். இவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் இருக்க, உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்,''என்றார். 3வது இடத்தில் தேவ்தத் படிக்கல் வரலாம். சுதர்சனுக்கு பதிலாக மும்பை வீரர் சர்பராஸ் கான் வாய்ப்பை எதிர்பார்க்கிறார். இவர் மீது இந்திய பயிற்சி குழுவின் ஒருவர், தேர்வுக்குழுவினர் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். இதனால் புதிதாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

அவசரம் காரணம்: இதற்கிடையே முன்னணி வீரர்கள் அடிக்கடி காயம் அடைவது, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா, ஹர்ஷித் ராணா, தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் உட்பட 13 பேர் காயத்தால் அவதிப்படுகின்றனர். இவர்கள், பெங்களூருவில் உள்ள, பி.சி.சி.ஐ., உயர்திறன் மையத்தில், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக குணமடைவதற்கு முன்பே, மையத்தின் நிபுணர்கள் அவசரப்பட்டு உடற்தகுதி சான்றிதழ் அளிப்பதாக தேர்வுக்குழுவினர் புகார் கூறுகின்றனர். உடல் எடை அதிகமாக இருந்த ஹர்ஷித் ராணாவை (97 கிலோ) இங்கிலாந்து தொடரில் சேர்க்க அனுமதி அளித்தனர். இதே போல இலங்கை தொடரில் குறைந்தது ஒரு போட்டியில் பும்ரா, சுதர்சன் விளையாடலாம் என முதலில் தெரிவித்தனர். பின் 'பும்ராவின் முழங்காலில் நீர் இருப்பதாகவும், குணமடைய அதிக காலம் தேவைப்படும்' என்றனர். சுதர்சன் தினமும் 75 நிமிடம் பேட் செய்வதாக கூறினர். திடீரென இவரது விரல் பகுதியில் இன்னும் வலி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா, பெங்களூரு, உயர்திறன் மைய தலைவர் லட்சுமணை சந்தித்து பேச உள்ளார்.

பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''முன்னணி வீரர்களின் காயம் தொடர்பாக இன்று பெங்களூருவில் சைக்கியா, லட்சுமண் விவாதிக்க உள்ளனர். இதில் பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்பரா என தெரியவில்லை'' என்றார்.

தவிக்கும் நட்சத்திரங்கள்

காயத்தில் அவதிப்படும் முன்னணி வீரர்கள்.

பும்ரா (இடது முழங்கால் வீக்கம், நீர்)

ஹர்திக் பாண்ட்யா (இடது தொடையில் தசை பிடிப்பு)

நிதிஷ் குமார் (இடது தொடை முன் பகுதியில் பிடிப்பு)

சாய் சுதர்சன் (வலது கால் பெருவிரலில் காயம்)

ஹர்ஷித் ராணா (எடை அதிகம், வலது தொடை பிடிப்பு)

வாஷிங்டன் சுந்தர் (வலது தொடையின் பின் தசையில் காயம்)

வருண் சக்ரவர்த்தி (இடது தொடையில் காயம்)

ஆகாஷ் தீப் (முதுகு பகுதியில் அழுத்தம்)

ரியான் பராக் (வலது தோள்பட்டை காயம்)