📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 10:04 AM

சர்தார் 2: உளவாளியாக மிரட்டும் கார்த்தி; ஆக்‌ஷன் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா

சர்தார் 2: உளவாளியாக மிரட்டும் கார்த்தி; ஆக்‌ஷன் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா

சர்தார் 2: உளவாளியாக மிரட்டும் கார்த்தி; ஆக்‌ஷன் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா - டிரெய்லரில் இடம்பெற்ற சுவாரஸ்ய அம்சங்கள்

தன்னுடைய வீடு சென்னையில் இருப்பதாகவும், அவ்வப்போது மும்பைக்கு சென்று வருவதாகவும், மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக வெளியான தகவல் குறித்து நடிகர் சூர்யா பதிலளித்தார்.

Published : September 1, 2026 at 9:05 AM IST

சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள ஸ்பை த்ரில்லர் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது.

பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த ’சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ’சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

டிரெய்லரின் ஆரம்பத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தடுக்க ஒரு ரகசிய உளவாளி தேவை என அதிகாரிகள் தெரிவிக்க்கும் நிலையில், தனது ஊர் கோயிலில் காவடி தூக்கும் சாமானியனாக கார்த்தி தோன்றுகிறார்.

பின்னர், தேசத்தின் தேவையை கருதிம் ஜப்பான் நாட்டிற்கு சென்று அந்த மிஷனை முடித்து வைக்கிறார். அப்போது அவர் வேறு வழியில்லாமல் நாட்டிற்காக உளவு பார்ப்பதை தொடரும் சூழ்நிலை ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும், தெருக்கூத்து கலைஞராக கார்த்தி நடித்துள்ளார் என தெரிகிறது. பின்னர் உளவாளியாகும் கார்த்தி சிறை சென்று வந்த பிறகு, நாட்டிற்கு பெரும் ஆபத்தாக இருக்கும் வில்லன் எஸ்.ஜே. சூர்யாவை தனது மகன் போலீஸ் கார்த்தியுடன் சேர்ந்து எப்படி எதிர்கொள்கிறார் போன்று கதைக்களம் அமைந்திருக்க வாய்ப்புள்ளது.

சர்தார் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த டிரெய்லரில் மிரட்டல் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா கவர்கிறார்.

சாம் சி.எஸ் 100வது திரைப்படம்

’சர்தார் 2’ இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 100-ஆவது படமாக அமைந்துள்ள நிலையில், டிரெய்லரில் அசத்தலான இசையை வழங்கியுள்ளார். இரும்புத்திரை, ஹிரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், விழிப்புணர்வு ஏற்படுத்திய விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் வழங்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

பின்னர் இயக்கிய சர்தார் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் உளவாளியின் வாழ்க்கை, தண்ணீர் அரசியல் ஆகிய பிரச்சனைகளை மையக்கருவாக கொண்டு கதை நகரும். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மக்களுக்கு தேவையான முக்கிய அரசியல் பேசப்பட்டுள்ளது என எஸ்.ஜே.சூர்யா படத்தில் புரமோஷனில் பேசியிருந்தார். ’சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக ’சர்தார் 2’ இசை வெளியீட்டு விழாவில் ‎நடிகர் சூர்யா மேடையில் பேசுகையில், “இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை பார்க்கும் போது ஏதோ ஹாலிவுட் திரைப்படம் என்று நினைத்தேன். பிறகு இது நம்ம ஊர் படம் என தெரிந்தது. கார்த்தி உட்பட படக்குழுவினர் அனைவருமே அசாத்தியமான உழைப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

என் வீடு சென்னை தான் - சூர்யா

தொடர்ந்து ‎நடிகர் சூர்யாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், நீங்கள் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் அடிக்கடி பார்க்க முடிகிறது. அது உண்மை தானா? என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யா, “நான் சென்னையில் தான் இருக்கிறேன். என்னுடைய வீடு இங்கு தான் இருக்கிறது. சில சமயம் மும்பைக்கு சென்று வருவேன் மற்றபடி வேறொன்றும் இல்லை” என பதிலளித்தார்.

தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், “‎படத்தின் தயாரிப்பாளர் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார், 120 நாளும் அவரது உழைப்பு அளப்பரியது. அதேபோல நடிகர் கார்த்தி மிகவும் நேர்த்தியான நடிகர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அந்த வார்த்தையை கடைசி வரையிலும் மறக்காதவர். பெரும் பொருட்செலவு செய்யக்கூடிய திரைப்படங்கள் மக்களுக்கு பிடித்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயம் கிடையாது.

’துரந்தர்’ வரிசையில் ’சர்தார் 2’

ஆனால் இந்த படம் அப்படி இருக்காது, நிச்சயமாக பெரும் பொருட்செலவுடன் மக்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் வந்த ’துரந்தர்’ திரைப்படம் மக்களுக்கு பிடித்தது. அதேபோல எங்களுடைய படமும் வந்திருக்கிறது. இந்த படமானது நிச்சயமாக ஹாலிவுட் தரத்தில், திருச்செந்தூர் முருகன் அருளால் உருவாகியுள்ளது. ’சர்தார் 3’ எடுக்கும்போது நிறைய காதல் காட்சிகள் வைக்குமாறு இயக்குநருடன் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், ”‎நம்முடைய திரைப்படங்களில் வரக்கூடிய காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் இவை அனைத்தையும் வெளிநாட்டவர்கள் ரசிக்கவும் செய்கிறார்கள், அதே நேரம் கிண்டல் செய்யவும் செய்கிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட மாளவிகா மோகன் ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையில், காதல் காட்சிகளை இயக்குநர் வைக்கவில்லை.

அனுசுயா ரெகாந்த நல்ல நடன கலைஞர் இருப்பினும், இந்த படத்தில் என்னுடன் ஓடிக்கொண்டே இருப்பார். அவரை பார்க்கும் போது எனக்கு ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஆண்ட்ரியா நினைவுக்கு வந்தார். படத்தைப் பார்த்த பிறகு யாரும் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த சிறிது யோசிப்பார்கள்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனியாக ஒரு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அனைத்து பிரியாணி கடைகளிலும் ’கைதி’ படத்தின் இசையை தான் போடுகிறார்கள். நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா கேமரா முன்பு 100 சதவீதம் நடிக்கிறார் என்றால், டப்பிங் மைக் முன்பு 500 சதவீதம் நடிக்கிறார். எம்.ஆர்.ராதா, நம்பியாருக்கு பிறகு வில்லத்தனத்தில் தற்போது தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார். படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என கூறினார்.