சட்டசபையில் மக்கள் பிரச்னை பேசுங்க.. கொடுத்த வாக்குறுதியை உண்மையா நிறைவேற்றுங்க... விஜய்க்கு பிரேமலதா கண்டிப்பு
சட்டசபையில் மக்கள் பிரச்னை பேசுங்க.. கொடுத்த வாக்குறுதியை உண்மையா நிறைவேற்றுங்க... விஜய்க்கு பிரேமலதா கண்டிப்பு
விருத்தாசலம்: தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் மற்றும் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ அளித்த பேட்டி: கார் வசதி இல்லாத எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தவறில்லை. ஆனால் ஏற்கனவே வசதி உள்ளவர்களுக்கு அது தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து.
ஒரு பக்கம் அரிசி விலை உயர்கிறது. மறுபக்கம் விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. இந்த இரண்டையும் அரசு உடனடியாக தடுத்து, நேரடியாக நெல் கொள்முதல் செய்து கிடங்குகளில் சேர்க்க வேண்டும். நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புற அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து வசதிகளை தரம் உயர்த்த வேண்டும்.
மானிய கோரிக்கை விவாதங்களின்போது மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேசினால் அவைக்கு நல்லது. ஆனால், விவாதங்கள் திசைமாறி வேறு விஷயங்களுக்கு சென்று விடுகின்றன. இதை சரிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பெண்கள் யாரும் இலவச சிலிண்டர் கேட்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். அரசாங்கம் என்றால் கொடுத்த வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.