📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 26, 2026 09:06 PM

Flash Floods: அதென்ன திடீர் வெள்ளப் பெருக்கு?

Flash Floods: அதென்ன திடீர் வெள்ளப் பெருக்கு?

ஏரிகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், எவரெஸ்ட் மலை உச்சி என்று இயற்கை எழில் கொஞ்சும் தேசம் நேபாளம். அழகுடன் ஆபத்தும் இலவச இணைப்பு என்பது போல் நேபாளம் மழை வெள்ளம், நிலச்சரிவுகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்காகவும் அறியப்படுகிறது.

அப்படியான பேரிடர்தான் அந்நாட்டில் இன்று (ஆக.26, 2026) ஏற்பட்டது. அமைதியாக காலைப் பொழுதைக் கண்ட நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்கு விடியல் அமைதி வெகுநேரம் நீடிக்கவில்லை. காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கண் இமைக்கும் நேரத்தில் கோசி ஆற்றங்கரைகளை மீறிப் பாய்ந்த அந்த வெள்ளம் வீடுகள், விடுதிகள் இன்னும் பல கட்டிடங்கள், வழியில் இருந்த பாலங்கள், நேபாளம் அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருந்த சில கட்டுமானத் திட்டங்கள் என அத்தனையையும் வாரிச் சுருட்டிக் கொண்டு பாய்ந்தது.

நேபாளத்துக்கு சுற்றுலா செல்வதற்கு உகந்த மாதங்களாக அக்டோபர், நவம்பர் மாதங்களே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சிலர் தங்களின் தோதுப்படி ஆண்டு முழுவதுமே வருகின்றனர். இன்னும் சில வேளைகளில், சலுகை விலை டூர் பேக்கேஜ்களை ஏற்பாடு செய்யும் ஒரு சில ஏஜென்சிகள் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நேபாள சுற்றுலாவுக்கு சற்றும் பொருந்தாத பருவமழைக் காலத்தில் சுற்றுலா அனுப்பி வைக்கின்றனர் என்ற புகாரும் இருக்கிறது.

ஆகஸ்ட் 26 திடீர் வெள்ளப் பெருக்கில் 105 இந்தியர்கள் உள்பட 384 சுற்றுலா பயணிகள் மாயமாகினர் என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் மொத்தம் 291 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திடீர் வெள்ளப் பெருக்கு என்றால் என்ன? இமாலய மலை தேசமான நேபாளம் ஏன் அடிக்கடி இத்தகைய பேரிடரில் சிக்குகிறது என்பது குறித்து சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

அதென்னெ திடீர் வெள்ளப் பெருக்கு?

வழக்கமாக பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும்போது ஒரு தாழ்வான பகுதியோ அல்லது வேறொரு பகுதியோ வெள்ள பாதிப்புக்கு உள்ளாகலாம்.

ஆனால், அப்படியான தொடர் மழையாக இல்லாமல் குறுகிய நேரத்தில் பெய்யும் அதி கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு, பனிப்பாறை ஏரி வெடித்து தண்ணீர் வெளியேறுவது (glacial lake outburst flood - GLOF) ஆகியனவற்றால் ஏற்படும் வெள்ளப் பெருக்குதான் திடீர் வெள்ளப் பெருக்கு எனக் கூறப்படுகிறது.

முந்தைய சாதாரண வெள்ளப் பெருக்கு போல் அல்லாது எந்தவித முன்னெச்சரிக்கை நிலவரமும் இன்றி சட்டென ஏற்பட்டு பயங்கர சேதத்தை ஏற்படுத்திவிடுவதாலேயே இதை ஃப்ளாஷ் ஃப்ளட்ஸ் (Flash Floods - திடீர் வெள்ளப் பெருக்கு) என்று குறிப்பிடுகின்றனர். பனிப்பாறை ஏரி உடைப்பே இன்றைய திடீர் வெள்ளப் பெருக்குக்கு காரணம் என நேபாள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

அதுவும் மலைப்பகுதிகளில் தண்ணீர் கீழ்நோக்கி குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாகப் பாயும் போது கணக்கிட முடியாத வேகத்தில் ஒரு பேரழிவு சக்தியாகவே பாயும்.

நேபாளம் ஏன் இத்தகைய திடீர் வெள்ளத்தில் சிக்குகிறது?

பூகோள அமைப்புப்படி நேபாளம் அமைந்துள்ள பகுதி இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழக் கூடிய பகுதி என்பதாலேயே நேபாளம் இத்தகைய திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்குகிறது.

நேபாளம் புவியியல் ரீதியாக இளமையான இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது. அங்குள்ள செங்குத்தான சரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆறுகள் வேகமாகப் பாய்ந்து வருகின்றன. அதனால் பருவமழைக் காலங்களில் கனமழை பெய்தால், அவை புனல் வழியாகச் செல்வதுபோல் சட்டென குறுகிய பள்ளத்தாக்குகளில் பாய்ந்துவிடுகிறது. இதனால் அழகாக அமைதியாக காட்சியளிக்கும் நீரோடை கூட ஆர்ப்பரிக்கும் நீரோட்டமாகிவிடுகிறது.

இந்த ஆபத்தை காலநிலை மாற்றம் இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. பனிப்பாறை ஏரிகளை உருகச் செய்து கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் உருகினால் அதைத் தடுக்கும் இயற்கை அரணாகத்தான் பாறைகள் இருக்கும். ஆனால், பனிப்பாறை உருகுதல் அதிகமாக நடக்கும்போது அதைத் தாங்கும் வலு இந்த இயற்கை அரண்களுக்கு இருக்காது.

நிலச்சரிவு, பனிப்பாறை சரிவு, பனிப்பாறை ஏரி வெடிப்பு ஏற்பட்டால் பல லட்சம் கேலன் அளவிலான தண்ணீர் டவுன்ஸ்ட்ரீமில் (அதாவது கீழ்நோக்கி) பாயும்.

எல்லை தாண்டிய அச்சுறுத்தல்:

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் ஆதிமூலம் திபெத். அங்கு ஏற்பட்ட பேரிடர் நேபாளம் வழியாகக் கடந்து திரிசூலி நதி அமைப்பில் புகுந்திருக்கிறது. அதாவது போட்டே கோசி ஆற்றில் உருவாகி கண்டக் ஆறு வரை தாக்கத்தை செலுத்தியுள்ளது.

கோசி, கண்டக் ஆறுகள் நேபாளம் மட்டுமல்ல இந்தியாவிலும் ஓடுகின்றன. அதனால்தான் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கை அடுத்து பிஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உஷார் நிலைக்குச் சென்றுள்ளன. இது ஓர் எல்லை கடந்த அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

நேபாளத்தில் இதுபோன்ற திடீர் வெள்ளப் பெருக்குகள் புதிதல்ல. கடந்த ஆண்டு (2025), போட்டே கோசி ஆற்று வெள்ளம் நேபாளம் - சீனாவை இணைக்கும் ஒரு பாலத்தையே அடித்துச் சென்றது.

இந்த முறை பல கிராமங்கள், டிமுரே எல்லைச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிமுரே எல்லை சந்தை என்பது நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில், திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் சுங்கப் பகுதியாகும். அதுமட்டுமல்லாது கிட்டத்தட்ட 11 நீர்மின் நிலையத் திட்டங்களை சர்வநாசமாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தைப் பொறுத்தவரை மலைகள், பருவமழை, நிலையற்ற நிலப்பரப்பு, புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவை ஒன்றிணைந்து திடீர் வெள்ளப் பெருக்கை உருவாக்கி சில நிமிடங்களிலேயே பேரழிவை உருவாக்கிவிடுகின்றன. அதனால், அந்நாட்டுக்கு திடீர் வெள்ளப் பெருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இயற்கையை நாம் ஆண்டுக்கணக்கில் மெதுவாகச் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது திருப்பிக் கொடுக்கும்போது கண் இமைக்கும் நேரங்களில் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிடுகிறது.

வளர்ச்சித் திட்டங்கள் மனிதனின் / அரசுகளின் பேராசை வளையத்துக்குள் சிக்கும்போது, விளைவுகள் இப்படியானதாக மட்டுமேதான் இருக்கும். இதை நினைவில் கொண்டு இயற்கை வளங்களை இன்று நாமும், இனி வரும் இன்னும் பல சந்ததியினர் மகிழ்ந்து, கொண்டாடி அனுபவிக்க வழிவகுக்க வேண்டுமே தவிர எல்லாவற்றையும் அழிக்க முற்படக் கூடாது. இயற்கையின் பேரழிவு மிகக் கோரமானது. அது ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்படும் அணுகுண்டுகளையும் விட ஆபத்தானது என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.