எகிப்தின் மாபெரும் பிரமிடுக்குள் மர்மக் கதவு
கெய்ரோ: எகிப்தின் புகழ்பெற்ற ‘கிஸா பெரு பிரமிட்டுக்கு’ (Great Pyramid of Giza) உள்ளே இருக்கும் ரகசியக் குறும் பாதையில் இயந்திர மனிதக் கருவியை அனுப்பி நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ 4,500 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் மர்மமான தடுப்புச் சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழங்காலப் பாரம்பரியச் சின்னமான அந்தப் பிரமிட்டுக்குப் பங்கம் ஏற்படுத்தாமல் ஆய்வு செய்ய, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய இயந்திர மனிதக் கருவி பயன்படுத்தப்பட்டது.
மனிதர்கள் நுழைவதற்குச் கடினமான, அபாயகரமான 100 அடி நீளமுள்ள குறுகிய பாதையில் பயணம் செய்த அந்த ரோபோ, இறுதியாக முழுமையாக மூடப்பட்ட ஒரு கல் கதவைக் கண்டறிந்துள்ளது.
பூட்டிய தடுப்பின் மறுபக்கம் என்ன இருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொல்பொருள் ஆய்வாளர்களிடையே மீண்டும் எழுந்துள்ளது.
வெப்பப் படப்பிடிப்பு, முப்பரிமாண வரைபடத் தொழில்நுட்பம், ‘மூவான் ஸ்கேனிங்’ (muon scanning) போன்ற நவீன முறைகள் மூலம் பிரமிட்டின் உள்கட்டமைப்பு, வடிவமைப்புகள் குறித்து அடுத்தக் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எகிப்து நாட்டில் அரச குடும்பத்தினரின் இறந்த உடல்கள் மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையோடு, மம்மிகளாகப் பதப்படுத்திப் பாதுகாத்து வைக்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரமிடுகள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக, கிஸா பிரமிடு, பல ஆண்டுகளாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை, அந்த பிரமிட்டின் உள்கட்டமைப்புப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
“இந்தப் பாதை தொடர்பான கண்டுபிடிப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை 2026ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளியிடப்படும்,” என்று பிரபல எகிப்தியவியல் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ் தெரிவித்துள்ளார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“இங்குக் கிடைக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு, பழங்கால எகிப்தைப் பற்றிய புரிதலையே முற்றிலும் மாற்றக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தத் தடுப்புச் சுவருக்குப் பின்னால் என்ன மறைந்துள்ளது என்பது குறித்து இதுவரை எகிப்துத் தொல்பொருள் துறை அதிகாரபூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.