📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 10:04 AM

"எங்கள் நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை"

"எங்கள் நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை"

"எங்கள் நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை" - ஜி ஸ்கொயர் விளக்கம்

"எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என நீங்கள் நிரூபித்துவிட்டால் என் 50 சதவீத பங்குகளை உங்களுக்கு கொடுக்கிறேன்" என்று ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமாஜெயம் சவால் விடுத்துள்ளார்.

Published : August 27, 2026 at 10:54 PM IST

சென்னை: ஜி ஸ்கொயர் நிறுனத்திற்கும், சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த நிறுனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "கடந்த சில நாட்களாக சட்டமன்றத்தில் எங்கள் நிறுவனத்தை பற்றிய பேச்சுகள் வருகின்றன. அதற்கு விளக்கம் அளிக்கிறேன். எங்கள் நிறுவனத்தை நம்பி 5,000 குடும்பங்கள் இருக்கின்றன.

நாங்கள் 2008-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறைக்குள் வந்தோம். 2012ஆம் ஆண்டுதான் ஜி ஸ்கொயர் என்று பெயர் வைத்தோம். எனது இரண்டு பிள்ளைகளின் பெயரை வைத்துதான் ஜி ஸ்கொயர் என்று பெயர் வைத்தோம். இதுவரை எங்கள் நிறுவனத்தின் மீது ஒரு புகாரும் வந்தது கிடையாது. எங்கள் நிறுவனத்தின் மீது ஒரு வழக்குகூட கிடையாது. நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை கொண்டு வந்தோம்.

2021-22 காலகட்டத்தில், சில சமூகவலைத்தள பக்கங்கங்கள், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டன. 2019-ஆம் ஆண்டு ரெய்டு நடைபெற்றது. அதனையும் நாங்கள் கடந்து தான் வந்திருக்கிறோம்.

2020, 2021-ஆம் ஆண்டுகளில், எங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைந்து, சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து வியாபாரம் செய்தோம். இந்த வளர்ச்சி எல்லாம் நாங்கள் தனிப்பட்ட முறையில் அடைந்தது. நாங்கள் யாருடனும் சேர்ந்து வளர்ச்சி அடையவில்லை.

2021-ஆம் ஆண்டுக்கு பிறகு நகரத்துக்குள் நாங்கள் அடுக்குமாடி வீடுகளை கட்ட ஆரம்பித்தோம். வருமான வரி சோதனை வந்தபாேது ஒரு ரூபாய் கூட அவர்கள் கைப்பற்றவில்லை. டிஜிட்டல் முறையில்தான் நாங்கள் பணப் பரிவர்த்தனை செய்து வருகிறோம். நேரடியாக பணத்தை பெற மாட்டோம்.

பிரபல நிறுவனங்களும் எங்களிடம் நிலம் விற்றுள்ளன. கோவிட் காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் பல சவால்களை சந்தித்தன. நானும் சவால்களை சந்தித்தேன். கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வட்டி செலுத்தி வருகிறேன். இந்திய அளவில் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனரான எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு பெண்தான் பார்க்க வேண்டுமே தவிர, மாப்பிள்ளை பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என நீங்கள் கூறிவிட்டால் நான் 50 சதவீத பங்குகளை கொடுக்கிறேன்.

திமுகவுடன் என்னை தொடர்புபடுத்தி, அவர்களும் எனக்கு அனுமதி கொடுக்காதவாறு பல செயல்களை செய்தனர். பரந்தூர் அருகே ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு 900 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதற்காகத்தான் திமுக அந்த இடத்தில் விமான நிலையம் வரவேண்டும் என்று நினைக்கிறது சமூக ஊகடங்களில் வதந்தி பரப்பினர்.

எனக்கு 80 நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கோ, எனது பிள்ளைகளுக்கோ எனது உறவினருக்கோ அந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது. அப்படி இருக்கிறது என நீங்கள் நிரூபித்தால் அந்த நிலத்தை உங்களுக்கு இலவசமாக தருகிறேன். கோயம்புத்தூரில் எனக்கு 1,000 ஏக்கர் நிலம் கிடையாது. 2006-இல் இருந்து 2012ஆம் ஆண்டு வரை வேறொரு நிறுவனம் அங்கு இடம் வாங்கியது.

திருப்பூரில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டுக்கு சென்றபோது அவற்றை மீட்டு என்னுடைய இடத்தில் வைத்து பராமரித்து வருகிறேன். அந்த அளவிற்கு இரக்க குணம் உள்ளவன் நான். ஒரு மாதத்திற்கு கோடிக் கணக்கில் மாடுகளுக்கு செலவு செய்து பாதுகாத்து வருகிறேன். நான் கால்நடைகளை வெளியேற்றுவேன் என்று எப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆதாரம் இல்லாமல் சட்டமன்றத்தில் யார் பேசினார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆதாரம் கேட்டு சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளேன்.

சபரீசனுக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை நான் இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். 2012 முதல் ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறேன். என்னுடைய நிலத்தில் மலை ஏதும் கிடையாது. அப்படி இருந்தால் அந்த இடத்தை நான் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து விடுகிறேன்.

என் மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் நிரூபித்துவிட்டால், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நீங்கள் மாறிவிடுங்கள்" என்று அவர் சவால் விடுத்தார்.