Fact Check: திமுக ஆட்சியில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா? உண்மை அறிக
Fact Check: திமுக ஆட்சியில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா? உண்மை அறிக
திமுக ஆட்சியில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கூற்று ஒன்று பரவி வருகிறது
தென் மண்டல கவுன்சில் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்றது. அதில், பேனரில் தமிழ் இடம் பெற்றிருந்ததாகவும் அதுவே கடந்த முறை திமுக ஆட்சியின் போது நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தின் பேனரில் தமிழ் இடம்பெறவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இத்தகவல் குறித்து நியூஸ் மீட்டர் உண்மைச் சரிபார்ப்புக் குழு மேற்கொண்ட ஆய்வில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்பது கண்டறியப்பட்டது. 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை; மாறாக அக்கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்தான் நடைபெற்றது.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பேனர்களை வடிவமைக்கும் அதிகாரம் கூட்டத்தை நடத்தும் மாநில அரசிடமே இருக்கும் என்பதால், அது குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 19, 2026 அன்று ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் ஆகஸ்ட் 20, 2026 அன்று தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பங்கேற்றன.
அடுத்து, 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டம் குறித்த தகவல்களைத் தேடியபோது, மாநிலங்களுக்கு இடையேயான குழுச் செயலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் 03.09.2022 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை 'தி நியூஸ் மினிட்' மற்றும் 'தி பிரிண்ட்' உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
அத்துடன், செப்டம்பர் 3, 2022 அன்று PIB வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்ற புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அரங்கின் பேனரில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததும், கூட்டத்தை நடத்தும் மாநிலத்தைக் குறிக்கும் வகையில் ‘Host - Government of Kerala’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெளிவாகத் தெரியவந்தது. கேரள அரசு நடத்திய அக்கூட்டத்தில் அம்மாநிலத்தின் தாய்மொழியான மலையாளமே இடம்பெறவில்லை; தமிழ்நாடு அரசு அதில் ஒரு பங்கேற்பாளராக மட்டுமே கலந்துகொண்டது.
முடிவாக, ஆகஸ்ட் 20, 2026 அன்று நடைபெற்ற 31-வது கூட்டமே தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது என்பதால், அதில் தமிழ் மொழி முதன்மையாக இடம்பெற்றிருந்தது.
ஆகவே, 2022-ல் கேரள அரசு திருவனந்தபுரத்தில் நடத்திய கூட்டத்தின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த கூட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாகத் தவறான தகவலுடன் தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்பதை நியூஸ் மீட்டர் உண்மைச் சரிபார்ப்பு உறுதி செய்துள்ளது.