இலங்கை அணிக்கு அடி மேல் அடி.. பாதி மேட்ச்சில் தினேஷ் நீக்கம்.. மாற்று வீரரோ கோல்டன் டக் அவுட்
இலங்கை அணிக்கு அடி மேல் அடி.. பாதி மேட்ச்சில் தினேஷ் நீக்கம்.. மாற்று வீரரோ கோல்டன் டக் அவுட்
காலே: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் சண்டிமால் காயமடைந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக களம் இறங்கிய மாற்று வீரரும் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகி இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தினார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்த தினேஷ் சண்டிமாலுக்கு தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனையில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியானது. எனினும், மூளை அதிர்ச்சி விதிமுறைப்படி அவர் இப்போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பாசிந்து சூரியபண்டாரா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கிய பாசிந்து, மானவ் சுதார் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக்-அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
முன்னதாக, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அசிதா பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தங்களது பவுன்சர் பந்துகளால் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்து தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரபாத் ஜெயசூர்யாவும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணியின் பேட்டிங்கில் கே எல் ராகுல் 35 ரன்களும், தேவ்தத் படிக்கல் 44 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை அணிக்கு 372 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. மானவ் சுதார் வீசிய சுழலில் சிக்கிய இலங்கை அணி, 47 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. காலே மைதானத்தில் இதுவரை 300 ரன்களுக்கு மேல் ஒரே ஒரு முறை மட்டுமேவெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி மட்டுமே ஒருமுறை 342 ரன்களை சேஸ் செய்தது.