மானவ் சுதார் ஷூ
மானவ் சுதார் ஷூ-வால் கொந்தளித்த இலங்கை கேப்டன்.. அம்பயரிடம் முறையீடு.. என்ன நடந்தது?
காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில், இந்திய இளம் வீரர் மானவ் சுதார் ஸ்பைக்ஸ் கொண்ட ஷூ-வை அணிந்து பேட்டிங் செய்தது சர்ச்சையானது. இதற்கு இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா கள அம்பயர்களிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மானவ் சுதார் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். அப்போது அவர் சாதாரண பேட்டிங் ஷூ-வுக்கு பதிலாக, உலோக ஆணிகள் போன்ற ஸ்பைக்ஸ் பந்துவீச்சு ஷூ-வை அணிந்து விளையாடினார். மேலும், பேட்டிங் செய்யும்போது அவர் ஆடுகளத்தின் விக்கெட்டுகளுக்கு இடைப்பட்ட அபாயகரமான பகுதி எனப்படும் டேஞ்சர் ஜோன் பகுதிக்குள் அடிக்கடி காலடி எடுத்து வைத்தார்.
இதனை கவனித்த இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா, உடனடியாக அம்பயர்களிடம் சென்று முறையிட்டார். ஏனெனில், ஆட்டத்தின் கடைசி இன்னிங்ஸில் இலங்கை அணி தான் இந்த சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும். ஸ்பைக்ஸ் கொண்ட காலணிகளால் ஆடுகளத்தில் பள்ளங்கள் ஏற்பட்டால், அது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக மானவ் சுதார் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த சாதகமாக அமைந்துவிடும்.
ஐசிசி விதிமுறைப்படி, பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தை சேதப்படுத்தக் கூடாது. ஸ்பைக்ஸ் கொண்ட காலணிகள் ஆடுகளத்தின் மண்ணை எளிதில் கிளறிவிடும் என்பதால் பந்து கணிக்க முடியாத அளவுக்குத் திரும்பும். இத்தகைய விதிமீறலுக்கு முதலில் எச்சரிக்கையும், தொடர்ந்து செய்தால் எதிரணிக்கு 5 பெனால்டி ரன்களும் வழங்கப்படும். வழக்கமாக கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் பந்துவீசி முடித்த களைப்பிலோ அல்லது அவசரத்திலோ காலணிகளை மாற்றாமல் பேட்டிங் செய்ய வந்துவிடுவதுண்டு.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் ஆடுகளத்தைச் சேதப்படுத்தியதற்காக தடை செய்யப்பட்டுள்ளனர். அம்பயர்கள் தலையிட்டு எச்சரித்ததால் நிலைமை கைமீறிப் போகவில்லை. பின்னர் இந்தப் போட்டியில் இலங்கை அணி 372 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது.