📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 18, 2026 05:02 PM

இலங்கையின் தொழில்முயற்சியாளர்களின் சிறப்பை முன்னிறுத்தும் SLIM SME Development Awards 2026 விருதுகள் மீண்டும் இடம்பெறுகிறது

இலங்கையின் தொழில்முயற்சியாளர்களின் சிறப்பை முன்னிறுத்தும் SLIM SME Development Awards 2026 விருதுகள் மீண்டும் இடம்பெறுகிறது

இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல், வர்த்தகநாம ஊக்குவிப்பு (branding), விற்பனை, புத்தாக்கம் மற்றும் நிலைபேறு கொண்ட வணிக வளர்ச்சி ஆகியவற்றில் காணப்படும் சிறப்பான சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் தனது தேசிய அர்ப்பணிப்பைத் தொடரும் வகையில், SLIM SME Development Awards (SMEDA) 2026 விருது வழங்கல் நிகழ்வு குறித்து இலங்கை சந்தைப்படுத்தல் கற்கைநிலையம் (Sri Lanka Institute of Marketing - SLIM) அறிவித்துள்ளது. முந்தைய நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையெங்கிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் தொழில்முறை சந்தைப்படுத்தல் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், மாறிவரும் சந்தை சூழலில் போட்டியிடும் திறனை வலுப்படுத்தவும் ஊக்குவிப்பதை SMEDA 2026 தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் தங்கள் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்க்கவும், அதேவேளையில் தங்கள் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திறனுக்கான தேசிய அங்கீகாரத்தைப் பெறவும் இந்த விருதுகள் வணிகங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. SLIM-இன் தலைவர் திரு. இனோக் பெரேரா அவர்கள் இது குறித்து கூறுகையில், “SMEDA 2026 என்பது வெறும் ஒரு விருது வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல, இது இலங்கையின் தொழில்முயற்சித் துறையின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும். வலுவான சந்தை நோக்குநிலை, ஈர்க்கக்கூடிய வர்த்தகநாமம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மனப்பான்மை ஆகியவற்றிலிருந்தே ஒவ்வொரு வெற்றிகரமான நிறுவனமும் தொடங்குகிறது என்று SLIM நம்புகிறது. இந்த முன்னெடுப்பின் மூலம், உள்ளூர் சந்தைகளைத் தாண்டி வளர்வதற்கும் உலகளாவிய அரங்கில் போட்டியிடுவதற்கும் தேவையான நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் எமது சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதை நாங்கள் எமது இலக்காகக் கொண்டுள்ளோம். எமது சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வெற்றிபெறும்போது, இலங்கையும் வெற்றிபெறுகிறது, என்று குறிப்பிட்டார். இந்த விருதுகள், இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பொருளாதாரத்தின் பரந்த தன்மையையும் பங்களிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை அங்கீகரிக்கும். முந்தைய நிகழ்வுகளைப் போலவே, பங்கேற்கும் வணிகங்கள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு சுயாதீனக் குழுவால், வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் செயல்திறனின் முக்கியப் பகுதிகளில் மதிப்பீடு செய்யப்படும். SLIM-இன் நிகழ்வுகள் மற்றும் நிலைபேற்றியலுக்கான துணைத் தலைவர் திரு. ரஜீவ் டேவிட் அவர்கள், இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதே SMEDA 2026-இன் பரந்த நோக்கம் என்பதை எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், “SMEDA 2026 என்பது வணிக வெற்றியை மட்டுமல்ல, புத்தாக்கம், மீள்திறன் மற்றும் பொறுப்பான வளர்ச்சியையும் அங்கீகரிக்கிறது. அங்கீகாரத்தைத் தாண்டி, இந்த விருதுகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிலைபேறு கொண்ட முறையில் வளர்ச்சி அடையவும், உலகளாவிய வாய்ப்புகளைப் பின்தொடரவும் தேவையான தெரிநிலை, நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையை வழங்குகின்றன.” கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான துணைத் தலைவர் மந்திக ரணசிங்க, வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம் மற்றும் வலுவான சமூகங்களுக்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பாளர்களாகத் தொடர்கின்றன என்று குறிப்பிட்டார். அங்கீகாரம், சந்தை சார்ந்த வளர்ச்சி மற்றும் தொழில்முறை சந்தைப்படுத்தல் நடைமுறைகளை அதிகளவில் பின்பற்றுதல் ஆகியவற்றின் மூலம் அவற்றின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க SLIM உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். SLIM பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. சமில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில், “SMEDA 2026 என்பது வெறும் அங்கீகாரத்திற்கான ஒரு தளம் மட்டுமல்ல. இது தொழில்முயற்சியாளரின் சாதனைகளைக் கொண்டாடுவதன் மூலமும், சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், மூலோபாயரீதியான சந்தைப்படுத்தல், வர்த்தகநாம ஊக்குவிப்பு மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதன் மூலமும் அவர்களுக்கு வலுவூட்டும் ஒரு முயற்சியாகும்.” SMEDA 2026, வளர்ந்து வரும் வணிகங்கள் மற்றும் துறை சார்ந்த சிறப்புகளுடன், நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் தொடர்ந்து அங்கீகரிக்கும். பங்கேற்கும் நிறுவனங்கள், அளவிடக்கூடிய வணிக முன்னேற்றத்தை அடைவதற்காக, சந்தைப்படுத்தல், வர்த்தகநாம ஊக்குவிப்பு, வாடிக்கையாளர் மீதான கவனம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறு கொண்ட நடைமுறைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளன என்பதை இந்த மதிப்பீட்டுச் செயல்முறை ஆராயும். SLIM SME Development Awards 2026 விருதுகள் நிகழ்வின் செயற்திட்டத் தலைவர், திரு. மதுரங்க வீரதுங்க கூறுகையில், “இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அனைத்து வணிகங்களிலும் கிட்டத்தட்ட 80%-ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%-க்கும் மேல் அவை பங்களிக்கின்றன மற்றும் தேசிய வேலைவாய்ப்பில் 45%-ஐ வழங்குகின்றன. மூலோபாயரீதியான சந்தைப்படுத்தல் என்பது உள்ளூர் புத்தாக்கத்தை உலகளாவிய மதிப்பு உருவாக்கத்துடன் இணைக்கும் பாலமாகும். SMEDA 2026 மூலம், உள்ளூர் நிறுவனங்களை அளவிடக்கூடிய மற்றும் நிலைபேறு கொண்ட வர்த்தகநாமங்களாக உயர்த்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” நடுவர் குழுவின் தலைவர் கலாநிதி ரொஷான் பெர்னாண்டோ கூறுகையில், “வணிக வெற்றியை அடைந்தது மட்டுமல்லாமல், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் மீதான கவனம், புதுமை மற்றும் நிலைபெறு கொண்ட வணிக நடைமுறைகளிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதே எங்கள் நோக்கம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தரத்தை தொடர்ந்து உயர்த்த ஊக்குவிக்கும் ஒரு அளவுகோலாக SMEDA விளங்குகிறது.” SMEDA 2026 நிகழ்வின் மூலம், சந்தைப்படுத்தலின் மதிப்பை பெரிய நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்தி, அதனை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான ஒரு நடைமுறை உந்துசக்தியாக நிலைநிறுத்துவதை SLIM தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இலங்கை நிறுவனங்கள் வலுவான வர்தத்கநாமங்களை உருவாக்கவும், போட்டித்திறனை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் உதவுகிறது. SMEDA 2026 தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, SLIM நிகழ்வுகள் குழுவைச் சேர்ந்த கங்கானி லியனகே அவர்களை +94 70 326 6988 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது gangani.l@slim.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்பு கொள்ளவும்.