IND vs AFG கிரிக்கெட் போட்டிக்கு FIFA உலககோப்பை தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு.. வசதிகள் என்ன?
IND vs AFG கிரிக்கெட் போட்டிக்கு FIFA உலககோப்பை தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு.. வசதிகள் என்ன?
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு டி20 தொடர், மிக உயர்தர தொழில்நுட்பத்துடன் ஒளிபரப்பப்பட உள்ளது. சமீபத்தில் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்திற்கு இணையான தரம் இதில் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தொடரின் தயாரிப்பு உரிமையைப் பெற்றுள்ள 'ஐடிடபிள்யூ யூனிவர்ஸ்' நிறுவனம், ஒளிபரப்புத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. 2002 முதல் அனைத்து ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களையும், குறிப்பாக ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியையும் இயக்கிய ஜேமி ஓக்ஃபோர்ட் இத்தொடரை இயக்கவுள்ளார்.
அதன்படி, இந்தியா - ஆப்கானிஸ்தான் தொடரின் ஒளிபரப்பில் AI-stabilised POV cameras, volumetric free-viewpoint technology, மேம்படுத்தப்பட்ட ஸ்பைடர்கேம் , அல்ட்ரா-மோஷன் மற்றும் சினிமா பாணியிலான கதைசொல்லல் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
Quidditch Innovation Labs நிறுவனத்தின் ஸ்பேஷியோ அமைப்பும் இத்தொடரில் பயன்படுத்தப்படும். இந்த அமைப்பு, ட்ரோன் காட்சிகளின் மீது உயர்தர ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு, நிகழ்நேர வீரர்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் ஆப்டிகல் பிளேயர் டிராக்கிங் வசதியையும் வழங்குகிறது.
இதன் மூலம், மைதானத்தில் ஃபீல்டிங் அமைப்பதைக் காட்டும் கிராபிக்ஸ், உத்தி சார்ந்த காட்சிகள் மற்றும் சுவாரஸ்யமான கேமரா கோணங்கள் போன்ற பல புதிய அம்சங்கள் ஒளிபரப்பில் சாத்தியமாகும்."இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்று முழுமையான ஃபிஃபா உலகக் கோப்பை ஒளிபரப்புத் தரத்தில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் பல யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிகளை இயக்கிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த ஒளிபரப்புக் குழுவை வழிநடத்துவார்கள்" என்று ஐடிடபிள்யூ யூனிவர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"நேரலையைக் காணும் ரசிகர்களுக்கு மைதானத்தில் அமர்ந்து பார்ப்பது போன்ற மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்று இந்நிறுவனத்தின் நிறுவனர் பைரவ் சாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாத பாதியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இத்தொடரை அதிகாரப்பூர்வமாக நடத்துகிறது