📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 18, 2026 04:30 AM

இந்திய முஸ்லிம் பேரவையின் தேசிய தினக் கொண்டாட்டம்

இந்திய முஸ்லிம் பேரவையின் தேசிய தினக் கொண்டாட்டம்

‘சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்’ என்பதிலுள்ள மூன்று சொற்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் சமூகம் சிறப்பாக முன்னேறுவது நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கும் என்றும் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீத் ரசாக் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். அங்கூலியா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான ரா.ராஜாராம், தமிழ் முரசின் ஆசிரியர் த.ராஜசேகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

“இறைப்பற்றும் தேசப்பற்றும் வெவ்வேறல்ல. ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பது ​தேசப்பற்றுடன் ​செயலாற்றக்கூடியதே என்பதை நபிமொழி நமக்கு காட்டுகிறது. ​நமது சேவை நமது சமுதாயத்திற்கு மட்டுமன்றி, நாட்டின் இலக்கையும் நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்,” என்றார் அவர்.

பல்வேறு இனங்கள் கூறும் கருத்துகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அவை கூறும் மதிப்புகளும் ஒன்றோடொன்று போட்டியிடுவதில்லை எனச் சுட்டினார்.

“சிங்கப்பூரில் நல்ல முஸ்லிமாக இருப்பது கடினமில்லை. இங்கு நாம் வசிப்பது நமக்குக் கிடைத்த பேரருள். ஒரு சிங்கப்பூர் இந்திய முஸ்லிமாக சமூகத்திற்குச் சேவை செய்வதும் அதன்மூலம் நாட்டிற்கும் சேவையாற்றுவதும் நமது கடமையாகும்,” என்று டாக்டர் ஹமீது ரசாக் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு, அங்கூலியா பள்ளிவாசலுடன் இணைந்து இக்கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.

புனித திருக்குர்ஆன் வசனங்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடுவது, உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் அங்கங்களும் இடம்பெற்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஹாஜி பரிஹுல்லாஹ் ‘சின்னஞ்சிறு எழில் நாடு’ பாடலைப் பாடினார்.

‘நமது நாடும், நாட்டை உருவாக்கியவர்களும்’ எனும் தலைப்பில் தமிழிலும் ‘சிங்கப்பூர் அனைவருக்குமானது - குறிப்பாக இளையருக்கானது!’ எனப் பொருள்படும் ஆங்கிலத் தலைப்பிலும் இளையர்கள் இருவர் உரையாற்றினர்.

ஸ்ரீ நாராயணா மிஷன் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜெயதேவ் உன்னித்தன், அதன் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் ஆகியோருக்கு பேரவை சார்பில் தேசிய தின விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.