📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 18, 2026 05:00 AM

தமிழ் புத்தக வெளியீடு: சூஃபி சிந்தனைகளும் சிங்கப்பூர் இலக்கியமும்

தமிழ் புத்தக வெளியீடு: சூஃபி சிந்தனைகளும் சிங்கப்பூர் இலக்கியமும்

ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் பல சமய உறவுகளுக்கான ஆலோசகராகப் பணியாற்றி வரும் முனைவர் எச்.எம்.சலீம் எழுதிய ‘பேசாப்பொருள்’ தமிழ் நூலும் ‘சில்ட்ரன் ஆஃப் மெட்ரோபோலிஸ்’ (Children of Metropolis) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

‘பேசாப்பொருள்’ நூல், தமிழ் சூஃபி சிந்தனைகளை ஆழமாக ஆராய்கிறது. சூஃபி கவிதைகள், இசை, தர்காக்கள், இலக்கிய மரபுகள் ஆகியவை சமூகங்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு வடிவமைத்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.

மற்றொரு நூலான ‘சில்ரன் ஆஃப் மெட்ரோபோலிஸ்’, இந்தியாவின் கவிஞர் இஷாக் எழுதிய 125 தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். நவீன நகர வாழ்க்கையின் மன அழுத்தங்களுக்கு இடையே வளரும் குழந்தைகளின் உணர்வுபூர்வமான பயணத்தையும் வசதியான வாழ்க்கை முதல் வறுமை வரையிலான அனைத்துப் பின்னணிகளையும் இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

கலை, மொழி, கலாசாரம் மூலம் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜாமியா சிங்கப்பூர் ஏற்பாட்டில் இந்த இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது.

சட்ட மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

“இந்திய முஸ்லிம் சமூகம் தனது தனித்துவமான குரல்களாலும் அனுபவங்களின் மூலமாகாவும் தமிழ் இலக்கிய, கலாசார வெளிப்பாட்டை நீண்டகாலமாக வளப்படுத்தியுள்ளது. இது, பல மொழிகள் பேசும் சிங்கப்பூர் இந்தியர் அடையாளத்தின் முக்கியப் பகுதியாக அமைகிறது,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

கொவிட்-19 காலத்தில் இந்தப் புத்தகத்தை எழுத உந்துதல் ஏற்பட்டதாக கவிஞர் இசாக், 53, கூறினார்.

“முனைவர் சலீம் சூழல், பண்பாடு, அதில் உள்ள இலக்கிய நயம் அனைத்தையும் உணர்ந்தவர் என்பதால், முழுமையாக ஆழமாக உணர்ந்து அக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் தொன்மை அடையாளங்களும் உணர்வுகளும் வெளிப்படும்,” என்றார் கவிஞர் இசாக்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தமிழ்ச் சமூகம், உறவுகளைக் கொண்டாடி வாழக்கூடிய ஒரு சமூகம். அதன் உணர்வுகளைப் பதிவுசெய்யும் இலக்கியங்கள் உலக மொழிகளுக்கு, குறிப்பாக, ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்லும்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று அவர் சொன்னார்.

“தமிழில் ஏராளமான சூஃபி இலக்கியங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கவிதைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை வெறும் இஸ்லாமிய இலக்கியமாக மட்டுமே வகைப்படுத்தி ஒதுக்கிவிடக் கூடாது. மனித சமூகத்தின் உயர்ந்த பண்புகளான அன்பு, நேர்மை, இயற்கை, அனைத்து உயிர்களுடனும் இணக்கமாகவும் வாழ்வது குறித்தே சூஃபி புலவர்கள் தமிழில் பாடியுள்ளனர்,” என்றார் முனைவர் சலீம், 77.

பதினாறு புத்தகங்களுக்கு நூலாசிரியரான முனைவர் சலீம், இக்கருத்துகளை வெளிக்கொணர்வது அவசியம் என்பதால் சூஃபி இலக்கியங்கள் குறித்து தாம் எழுத்தியதாக கூறினார்.