இடைத்தேர்தலிலும் வெற்றிவாகை சூடும் விஜய்.. தனுஷ், சிவகார்த்திகேயன் தாராளமா அரசியலுக்கு வரலாம்!
சென்னை: நடிகர்கள் நாடாள தமிழ்நாட்டில் எந்தவொரு தடையுமே இல்லை. மக்களுக்கும் சினிமா நட்சத்திரங்கள் தங்களை ஆள்வது ரொம்பவே சந்தோஷமான விஷயமாகவே பார்க்கத் தொடங்கி விட்டனர். சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு விஜய் 2 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன உடனே சில நடிகர்கள் நமக்கும் அரசியல் எதிர்காலம் ஓஹோன்னு இருக்கு என வேலைகளை சூடுபடுத்தத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், இதுவரை எண்ணப்பட்டு வரும் சுற்றுகளில் தவெக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் என 2 தொகுதிகளிலும் லீடிங்கில் உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதிமுக வென்ற இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்த நிலையில், ஒரு தொகுதியில் அதிமுக தொடர்ந்து தனது சக்தியை நிலைநாட்ட போராடி வருகிறது. ஆனால், மாலை முடிவு அதிகளவில் 2 தொகுதிகளிலும் தவெகவுக்கு சாதகமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிவாகை சூடும் விஜய்: தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், வெற்றி பயணத் திட்டம் என பெண்களுக்கு இலவச பஸ் என ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே விஜய் அடுத்தடுத்து லட்டு போல அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் அவருக்கான மாஸ் கொஞ்சமும் குறையவில்லை என்றும் இன்னமும் பெருகிக் கொண்டே போகிறது என்கின்றனர். கட்சித் தொடங்கி 2 ஆண்டுகளில் முதலமைச்சர் ஆகவில்லை என்றும் 33 ஆண்டுகள் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணனாகவும், மகனாகவும் மாமாவாகவும் நெஞ்சில் குடிகொண்ட பின்னர் தான் அரசியலுக்கு வந்ததாக விஜய் பேசிய நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மற்ற நடிகர்களுக்கும் அரசியல் கதவுகள் விஜய்க்கு திறந்ததை போல தாராளமாக திறந்தே இருக்கும் என்கின்றனர்.
தனுஷ் தீவிரம்: விஜய்க்கு அடுத்து தமிழ்நாட்டு மக்களின் அன்பை பெற்று அரசியலில் அடியெடுத்து வைத்து விட வேண்டும் என்பதில் நடிகர் தனுஷ் ரொம்பவே தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அந்த ஆசையில் தான் போயஸ் கார்டனில் எல்லாம் அவர் வீடு கட்டினார் என்றும் கூறுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த காரணமும் தமிழ்நாட்டு மக்கள் நடிகர்களை அங்கீகரிக்கும் விதம் தான் என்பதை புரிந்துக் கொண்டு தான் செயல்பட்டு வருகிறார் என்கின்றனர்.
சிவகார்த்திகேயனும் ஸ்பீடு காட்டுறாரே: தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாகி அதன் பின்னர் அவருடன் முரண்பாடு ஏற்பட்டு வெளியே வந்து தனியாக தயாரிப்பு நிறுவனம் எல்லாம் தொடங்கி தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே சம்பாதித்துக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை என தமிழ்நாட்டில் ரசிகர்கள் உள்ள நிலையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் தவெக வெற்றிப் பெற்றுவிட்டால், திமுக, அதிமுக எல்லாம் தூக்கி ஓரம்போட்டு விட்டு புதிய நடிகர்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்பதால் அரசியலில் அடுத்தடுத்து இவரும் குதிக்க ரெடியாகி வருகிறார் என்றே கூறுகின்றனர். பராசக்தி, சேயோன் என அவர் தேர்வு செய்யும் படங்களும் மக்களை அட்ராக்ட் செய்யும் விதமாகவே உள்ளதாக கூறுகின்றனர்.