📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 06:03 AM

குட்கா கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் ஏட்டு; காரின் மேற்கூரையில் படுத்தபடி 40 கி.மீ., த்ரில் சேஸிங்!

குட்கா கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் ஏட்டு; காரின் மேற்கூரையில் படுத்தபடி 40 கி.மீ., த்ரில் சேஸிங்!

அன்னுார்: கோவை அருகே குட்கா கடத்தப்பட்ட காரின் மேற்கூரையில் 40 கி.மீ., துாரம் பயணித்து கடத்தல் கும்பலை கோவில்பாளையம் போலீசார் பிடித்தனர். சினிமா ஷூட்டிங் போல நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை-சத்தி தேசிய, நெடுஞ்சாலையில், சரவணம்பட்டி அடுத்த காபி கடையிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் பாதையில் அதிகாலையில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவில் பாளையம் எஸ்.ஐ., விக்னேஷ், போலீஸ் ஏட்டு வேல்முருகன் ஆகிய இருவரும் நேற்று காலை 5:45 மணிக்கு அங்கு நின்று வாகன சோதனை நடத்தினர். அப்போது KA05NG7692 என்ற கர்நாடக பதிவெண் கொண்ட கிரேட்டா கார் வந்தது.

போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். காரில் வந்தவர்களிடம் எஸ்.ஐ., விக்னேஷ் விசாரித்துக் கொண்டிருந்தார். போலீஸ் ஏட்டு வேல்முருகன் காரின் மேற்கூரையில் உள்ள கம்பியை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

எஸ்.ஐ., விக்னேஷ் விசாரித்துக்கொண்டிருந்தபோது, காரில் இருந்தவர்கள் திடீரென காரை வேகமாக கிளப்பினர். சுதாரித்த போலீஸ் ஏட்டு வேல்முருகன் கம்பியை பிடித்து காரின் மேற்கூரையில் ஏறிக்கொண்டார். கம்பியை பிடித்துக் கொண்டு படுத்தபடி பயணித்தார். இதையடுத்து எஸ்.ஐ.,விக்னேஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காரை துரத்திச் சென்றனர். கார் விளாங் குறிச்சி, காளப்பட்டி, சித்ரா வழியாக, கணியூர் சுங்க சாவடி சென்றது. 40 கி.மீ பயணித்தும் அவர்கள் காரை நிறுத்தவில்லை. தகவல் அறிந்து கணியூர் போலீஸ் ரோந்து வாகனம், தேசிய நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ் ஆகியவையும் சேர்ந்து துரத்தின.

இந்நிலையில், அவிநாசி போலீசாரும் கோவை போலீசாரும், கோவை சாலையில் தனியார் ஹோட்டல் அருகே அந்த காரை மடக்கி பிடித்தனர். அந்தக் காரையும், காரிலிருந்து மூவரையும் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில், மூவரும் ராஜஸ்தான் மாநிலம், சன்சூர் மாவட்டம், பர்த்தா ராம் மகன் பாபு தாரா, 27. மர்மீர் பகுதியைச் சேர்ந்த அனுமன் மகன் ராஜேஷ், 23. ஜலோர் பகுதியைச் சேர்ந்த சோழா ராம் மகன் சுரேஷ், 20. என தெரிய வந்தது. மூவரும் பெங்களூரில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ குட்காவை கோவை மாவட்ட கடைகளுக்கு காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து, காரையும் 300 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

காரின் மேற்கூரையில், போலீஸ் ஏட்டு வேல்முருகன் அபாய நிலையில் படுத்தபடி 40 கி.மீ., பயணம் செய்தது வலைதளங்களில் வைரலானது. மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, கோவை சரக டி.ஐ.ஜி., சுவாமிநாதன், கோவை ரூரல் எஸ்.பி. பவன் குமார் ஆகியோர், பாராட்டு தெரிவித்தனர். அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ், கமலி ஆகியோர் வேல்முருகனை மொபைலில் தொடர்பு கொண்டு பாராட்டினர். இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அவரை பாராட்டினர். போலீஸ் ஏட்டு வேல்முருகன்,38. கூறுகையில், ''நான் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குறுத்தங்குளம் கிராமத்தை சேர்ந்தவன். 2011ல் காவல் துறையில் சேர்ந்தேன். மாவட்ட அளவிலான கபடி அணியில் பங்கேற்று உள்ளேன். எனது உடன் பிறந்த சகோதரர் முனியசாமி விருதுநகரில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அனைத்து தரப்பினரின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.