மிசாவில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
சென்னை: ''கடந்த தி.மு.க., ஆட்சியை, பத்து 'பவர் புரோக்கர்கள்' தான் நடத்தினர்,'' என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இ.கம்யூ., தேசிய பொதுச்செயலர் ராஜா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை, அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார், இ.கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின், நிர்மல்குமார் அளித்த பேட்டி: கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு, ஐந்து ஆண்டுகளுக்கு த.வெ.க., அரசு நீடிக்கும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'மிசா'வில் கைதானது தொடர்பாக பல விவாதங்கள் உள்ளன. 'மிசா'வில், தாக்கப்பட்டவர்களில் கூட, ஸ்டாலின் பெயர் சாட்சியாகவே உள்ளது. சிட்டிபாபு மரணத்தில், ஒரு சாட்சியாகவே ஸ்டாலின் பெயர் இருக்கிறது.
தி.மு.க., செய்த தவறுகள், துரோகங்களில் இருந்து தமிழகத்தை மாற்றி வருவதை சொல்லித்தான் ஆக வேண்டும். மூன்று தலைமுறையாக எதை சொல்லி மக்களை ஏமாற்றினர் என்பதை, இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்வது கட்டாயம்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், 'டாஸ்மாக்' நிர்வாகத்தை நடத்திய ரத்தீஷ் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்டாலினின் மாப்பிள்ளை மற்றும் மகனுடன் இருக்கும் 10 பேருடன் சேர்ந்து, 'டாஸ்மாக்'கை, ரத்தீஷ் என்ற தனி நபர் கட்டுக்குள் வைத்திருந்தார். அதனால், சட்டசபையில் அவரது பெயரை முதல்வர் குறிப்பிட்டார்.
ரத்தீஷ் போன்ற 'பவர் புரோக்கர்களை' வைத்து, தி.மு.க., அரசை நடத்தியுள்ளனர். இந்த ரத்தீஷ், அன்றைய துணை முதல்வர் உதயநிதியுடன், 24 மணி நேரமும் இருந்தவர். தற்போது, அவருக்கு எதிராக, தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமனுக்கு, ஆட்சியில் இருந்தபோது 'சீட்' கொடுக்கவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள்ளும் விடவில்லை. இப்போது, இடைத்தேர்தலில் நிறுத்தி உள்ளன. அவரது நிலைமை பரிதாபமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.