📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 02:04 AM

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... ரூ.4,800 கோடி!: சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் விஜய்

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... ரூ.4,800 கோடி!: சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் விஜய்

சென்னை:''மீஞ்சூரில் நாள்தோறும் 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்,'' என, சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் விஜய், வெளியிட்ட அறிவிப்புகள்:

 வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாள்தோறும் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

 ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

 கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க, 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல் படுத்தப்படும்

 பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த, 236 கோடி ரூபாய் செலவிடப்படும்

 சென்னை மாநகராட்சியில் 45 சதுர கி.மீ., பரப்பளவில், 35 கி.மீ., நீளத்திற்கு நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்படும். பள்ளிகளை சுற்றி 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகள், 110 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

 சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவிடப்படும்.

 சென்னையில் பாதாள சாக்கடை பணியில் சேதமடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

தி.மு.க., - சேகர்பாபு: வடசென்னை பாரதி மகளிர் கல்லுாரியில், 4,371 மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், சாலையோரம், கால்வாயோரம் வசிப்பவர்கள்.

இந்த கல்லுாரியில் 700 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்ட, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. நிதிச்சுமை என காரணம் கூறாமல், சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை முடித்து தரவேண்டும்.

அமைச்சர் ராஜ்குமார்: பாரதி மகளிர் கல்லுாரிக்கு பல்நோக்கு அரங்கம் கட்டும் பணிகள், 27.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன.

தற்போது, 22 சதவீத பணிகள் முடிந்துள்ளன. சி.எம்.டி.ஏ., கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ளதால், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2021 - 22ம் ஆண்டு தொடக்கத்தில், சி.எம்.டி.ஏ.,விடம் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நிதியாக 2,258 கோடி ரூபாய் இருந்தது. பிற துறைகளுக்காக சமூக உட்கட்டமைப்பு பணியை சி.எம்.டி.ஏ., ஏற்றுக்கொண்டது.

இவ்வாறு, 3,750 கோடி ரூபாய் மதிப்பிலான 201 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, நிலுவையில் உள்ள கட்டுமான பணிகளுக்கு, 1,055 கோடி ரூபாய் தேவை.

நிதி பொறுப்பு

வடசென்னை வளர்ச்சி திட்டம், சென்னை மெட்ரோ ரயில், வெளிவட்டச்சாலை பணிகள் என மொத்தமாக 4,245 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், சி.எம்.டி.ஏ.,விடம் 109 கோடி ரூபாய் மட்டுமே திட்டமிடல் நிதி உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.