Modha Rathri Review: மொத ராத்திரி நடந்ததா? மொத ராத்திரியில் என்னவெல்லாம் நடந்தது?.. முழு விமர்சனம்!
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் கடைசியாக தமிழில் டியூட் படத்தை தயாரித்தது. அந்த படத்தின் வித்தியாசமான கதை பல சர்ச்சைகளை கிளப்பியது. அதற்கு பிராயசித்தம் தேடும் விதமாக இப்படியொரு கதையை அடுத்த படமாகவே எடுத்து தயாரித்துள்ளதா மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற கேள்வி தான் படம் பார்க்கும் போது வந்தது.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன், ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், அப்துல் லீ, வர்ஷினி கார்மேகம் உள்ளிட்ட பலருடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ராஜா கருப்பசாமியும் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகவுள்ள இந்த மொத ராத்திரி படம் எப்படி இருக்கு? இயக்குநர் என்னவெல்லாம் சொல்ல வருகிறார், தியேட்டருக்குச் சென்று இந்த வாரம் இந்த படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
மொத ராத்திரி கதை: காதலியை இழந்த வலியுடன் மருதநாயகம் (ரிஷிகாந்த்) துபாயில் 6 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். சகோதரி மகனுக்கு காதுகுத்து என அவருக்கு காதுகுத்தி சொந்த ஊருக்கு அழைக்கும் குடும்பத்தினர் அவரது திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். மருதநாயகத்தை கட்டிக்க மண்டபத்தில் முத்துச்செல்வி (அனிஷ்மா அனில்குமார்) காத்திருக்க மாப்பிள்ளை வருவாரா? என ஆரம்பிக்கும் படத்தில் தனக்குத் திருமணம் ஆகப்போவதே தெரியாமல் வந்து இறங்குகிறார் மருதநாயகம்.
சரி, இருவருக்கும் திருமணம் ஆகி மொத ராத்திரிக்கு போவார்கள் என பார்த்தால் அங்கே தான் ஒரு ட்விஸ்ட். விருப்பமே இல்லாமல் தான் அம்மாவின் அடிக்கு பயந்து முத்துச்செல்வி மண்டபத்துக்கு வந்திருக்கிறார். அங்கே இருந்து காதலனுடன் தப்பித்துச் செல்ல நினைக்க, ஜென் ஸி கிட் காதலன் காதலியை சரியாக பிக்கப் பண்ண வராமல் போக இருவருக்கும் திருமணம் ஆகி விடுகிறது.
திருமணம் ஆனால், என்ன மொத ராத்திரிக்கு முன்பாக உன்னை கூட்டிட்டுப் போகிறேன் என வரும் காதலன் மொத ராத்திரிக்கு முன்பாக வந்தாரா? முத்துச்செல்வியை அழைத்துச் சென்றாரா? இல்லையா? என்பது தான் இந்த மொத ராத்திரி படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: பெண்ணுக்கு பெண்ணே எதிரி, ஒரு பெண் நினைப்பதை செய்ய முடியாமல் அடக்கி வைக்கும் ஆணாதிக்க சமூகம், காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல, திருமணம் செய்ய வேண்டும் என்றால் பணம், காசை விட துணிவு ரொம்பவே முக்கியம், சாதிய ஏற்றத்தாழ்வு பார்க்கும் இடமும் உடையும் இடமும், திருமண வீட்டில் நடக்கும் சண்டைகள், சிரித்து பேசும் முகங்களுக்கு பின்னாடி இருக்கும் இன்னொரு முகம் என ஏகப்பட்ட விஷயங்களை இயக்குநர் இந்த கதைக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்த விதமே படத்தை பார்க்க வைத்து விடுகிறது.
பாக்யராஜ் ஸ்டைலில் டைட்டில் போடுவது முதல் இயக்குநர் பெயர் வரும் இடம் என ஏகப்பட்ட விஷயங்கள் ரசிக்கும் படி உள்ளது. ஆணவக் கொலைகள் நடப்பதை சிறு தெய்வ வழிபாடு மூலம் படத்தின் தொடக்கம் முதலே காட்டுவது, சாமி வந்து ஆடினாலும், சில விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என காட்டிய விதம் என ஏகப்பட்ட குட்டி குட்டி மெசேஜ்களை இயக்குநர் படத்துடன் வைத்த விதமும் ஒரே ராத்திரியில் நடக்கும் கதையாக கொண்டு சென்று கடைசி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வைத்த விதம் பாராட்ட வைக்கிறது.
ஆனால், அதே சமயம் முதல் பாதியில் இருந்த அளவுக்கு கதையில் இருந்த வேகம், 2வது பாதியில் மழையை பெய்ய வைத்து விட்டு, கதை மாந்தர்களையும் நகர விடாமல், கதையையும் நகர விடாமல் செய்த இடத்தில் தொய்வு தென்படுகிறது. எடிட்டர் கொஞ்சம் கருணை காட்டாமல் நேரத்தை இன்னமும் கத்தரித்து இருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்.
பிளஸ்: அறிமுக இயக்குநராக இருந்தாலும் தயாரிப்பாளருக்கு சக்சஸ் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக டைட்டிலையே மொத ராத்திரி என கமர்ஷியலாக வைத்தது முதல் முத்துச்செல்வியின் காதலனாகவும் ராஜா கருப்பசாமி நடித்த விதம் சிறப்பு. மேலும், அவரது நண்பர்களாக வரும் அந்த மனசாட்சி சீனெல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்து விடும். ரிஷிகாந்த் ஹீரோவாக இந்த படத்தில் செம மெச்சூரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனிஷ்மா அனில்குமார் கல்யாண மேடையில் போடும் ஆட்டமும், கிளைமேக்ஸில் கத்தும் காட்சியுமே போதும் ஒட்டுமொத்த பெண்களின் குமுறலாக வெடித்துள்ளார்.
ஹீரோ, ஹீரோயினை தாண்டி மணமகளின் அம்மாவாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர், மாப்பிள்ளையின் அம்மாவாக நடித்துள்ள சங்கீதா பாலன், மாப்பிள்ளையின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் வெங்கடேஷ் அவருக்கான அந்த புல்லட் சீன், மரியாதையை எதிர்பார்க்கும் வெத்து வேட்டு தாய் மாமன் கதாபாத்திரத்தில் பக்ஸ், சகோதரி புருஷனாக நடித்துள்ள அப்துல் லீ மற்றும் இரு வீட்டார் பெண்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிப்பில் அசத்தியுள்ளனர்.
படத்துக்கு பெரிய பிளஸ் என்றால் பரத் ஷங்கரின் இசை தான். மேள தாள சத்தத்தை வைத்தே ஏகப்பட்ட இடங்களை கவர் செய்ததும் அந்த உணர்ச்சிகளை கடத்தியதற்கும் சபாஷ் போடலாம். டை டக்கா பாடல் சிறப்பு. ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பிரபஞ்சோதி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
மைனஸ்: இன்றைய கால ஜென் ஸி கிட்ஸை சோப்லாங்கி என கடைசி வரை காட்டியதை தவிர்த்து இருக்கலாம். முதல் பாதி மற்றும் கதாபாத்திரங்களுக்கு கொடுத்த ஆழத்தை இரண்டாம் பாதியில் கடத்த தவறியது மைனஸ் ஆக மாறி நிற்கிறது. ஹீரோ ரிஷிகாந்தை ஆரம்பத்தில் இருந்தே தேவதூதன் போல காட்டியதும், காதலனை ஆரம்பத்தில் இருந்தே சோப்லாங்கியாக காட்டிய விதத்தில் கிளைமேக்ஸ் இப்படித்தான் முடியும் என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது. அதை சற்றே தவிர்த்து இருந்தால் இன்னமும் இந்த 'மொத ராத்திரி' சிறப்பாக அமைந்திருக்கும்.
பார்க்கலாமா? வேண்டாமா?: ஆனாலும், கண்டிப்பாக இந்த வாரம் தாராளமாக குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்கக் கூடிய படமாகவே இந்த மொத ராத்திரி உள்ளது. சென்னையை கடந்து மற்ற மாவட்டங்களில் படம் பிக்கப் ஆகிவிட்டால் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் படமாகவும் இந்த மொத ராத்திரி மாறும்.