நாளை மறுநாள் ஆயுத பூஜை அலங்கார பொருட்கள் விற்பனை
கரூர்:ஆயுத பூஜையையொட்டி, கரூரில் அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் வரும், 19ல் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 20ல் விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில், கல்விக்கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியை வழிபடும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜை நடத்தப்படும். ஆயத்த ஆடை மற்றும் அது சார்ந்த தொழில், பிற வணிகம், வர்த்தகம் மேற்கொள்ளும் தொழிற் சாலைகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.
தொழில், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று, அனைத்து வாகனங்களையும் அலங்கரித்து பூஜை செய்வர்.
அவ்வகையில், கரூர் மாநகரிலுள்ள பல ஸ்டேஷனரி கடைகளில், வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை அலங்கரிக்க வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த அலங்கார தோரணம், ஆயுத பூஜை அட்டை, ஜிகினா தாள், தோரணம் கட்ட பயன்படும் பல வண்ண காகிதங்கள், பலுான் ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.
இதுதவிர, மின்னும் வகையிலான அலங்கார சீரியல் லைட் உள்ளிட்ட பலவகை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்க, தொழில் துறையினர், வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 50 முதல், 600 ரூபாய் வரை விற்பனையாகிறது.