‘ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்!’
‘ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்!’ - த.வெ.க அரசின் ‘ஷாக்’ அடிக்கும் ஒப்பந்தம்!
இதுவும்கூட எரிவாயு வாயிலாகத் தயாரிக்கப்படும் மின்சாரம் என்பதால்தான் இந்த அளவுக்கு விலை கூடுதலாக உள்ளது. எனவேதான் 1,000 மெகாவாட் மட்டும் இந்த மாதம் 31 வரையில் வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறோம். இதனால் ஒரு நாளைக்கு 7 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் செலவாகும்.
‘ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்குக் கொள்முதல்’ என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது!
தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வழி தெரியாமல் விழிபிதுங்கிவந்த தமிழக அரசு, தற்போது தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி ஒப்பந்தம் செய்திருப்பது ஆயிரம் வோல்ட் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
இது குறித்து தி.மு.க முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, ‘கடந்த ஆட்சியில் நாங்கள் ரூ.20-க்குக் கொள்முதல் செய்தபோது, ‘மின்சாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்’ எனக் கொந்தளித்தவர் இன்றைய மின்சாரத்துறை அமைச்சரான நிர்மல் குமார். ஆனால், இன்றைய ரீல்ஸ் ஆட்சியினர் ரூ.35-க்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கின்றனர். இது ஒட்டுமொத்த மின்துறையையே சீரழித்துவிடும்’ என மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மின்சாரத்துறையில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியோடு, ‘தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர்’ காந்தியைச் சந்தித்தோம்.
அவர், “தமிழக மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அரசு சார்பில் 5,700 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தைத் தயாரிக்கும் கட்டமைப்பு இருக்கிறது. ஆனால், அதிலிருந்து அதிகபட்சமாகவே 3,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படியென்றால், திட்டமிட்டே உற்பத்தியைக் குறைத்திருக்கிறார்களா?
அடுத்ததாக, ஏற்கெனவே போடப்பட்ட நீண்டகால, இடைக்கால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கக்கூடிய மின்சாரக் கொள்முதலையும் த.வெ.க அரசு முழுமையாகப் பயன்படுத்த வில்லை. ஆக, திட்டமிட்டே மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, இப்போது கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்ய அரசு முயற்சி செய்கிறது. அப்படியொரு சந்தேகம்தான் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.
ஆக, நம் சுய உற்பத்தியிலிருந்து கிடைத்திருக்க வேண்டிய 2,000 மெகாவாட், தனியாருடனான நீண்டகால ஒப்பந்தத்தில் 700 மெகாவாட், இடைக்கால ஒப்பந்தத்தில் 1,300 மெகாவாட் என மொத்தம் 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கவேண்டிய வாய்ப்பையெல்லாம் அரசுத் தரப்பில் வீணடித்திருக்கின்றனர். இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்கத் திட்டமிடப்பட்டால், அது ஊழலுக்கான அச்சாரம்தான். இப்படியொரு சந்தேகம் எழுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டால், ‘‘கடந்தகால தி.மு.க ஆட்சியில் நீண்டகால ஒப்பந்தம் போடவில்லை’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் அமைச்சர் நிர்மல் குமார். ஏற்கெனவே 2013-ல் போடப்பட்ட நீண்டகால ஒப்பந்தமே, 2027-ல் தான் முடிவடைகிறது. அதன் பிறகுதான், அடுத்த நீண்டகால ஒப்பந்தத்தையே போட முடியும். உண்மை இப்படியிருக்க, செய்த தவறுகளை மறைத்து அரசியலாக திசைதிருப்புகின்றனர். அது நியாயமல்ல...’’ என்றார் அழுத்தமாக.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து நம்மிடம் பேசியபோது, “மின்வெட்டு பிரச்னை கடந்த நான்கு மாதங்களாகவே தொடர்கிறது. ஆரம்பத்தில் ‘தமிழகத்தில் மின்வெட்டே இல்லை’ என்று மறுத்தவர்கள் பின்னர், ‘சில சதிகாரர்களால் மின்வெட்டு நிகழ்கிறது’ என்றார்கள். அதன் பிறகு ‘மற்ற மாநிலங்களைப்போல் நம் மாநிலத்தில் அதிக மின்வெட்டு இல்லை’ என்று பிளேட்டைத் திருப்பிப்போட்டார்கள். இப்படி மறைமுகமாக காரியமாற்றுவதை விட்டுவிட்டு, ‘தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருக்கிறது. கூடுதலாக மின் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று ஆரம்பத்திலேயே சொல்வதில் த.வெ.க அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?
இப்போதும்கூட, ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குவதென்பது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை.
மத்திய மின்சார ஆணையம், தேசிய மின் தொகுப்பு (National Grid, Indian Energy Exchange (IEX) Limited) மூலம் பல்வேறு மாநிலங்களும் மின் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை ஏற்கெனவே உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
இதன்படி ஒரு நாளைக்கு முன்னதாக இந்த அமைப்பின் மூலம் மின் கொள்முதல் செய்ய முடியும். அந்த வகையில், இந்த அமைப்பின் தற்போதைய விலை நிர்ணயம் என்பது ஒரு யூனிட் மின்சாரத்துக்கு வெறுமனே 8 ரூபாய்தான். ரொம்பவும் மின் தட்டுப்பாடு நிலவும் சூழலில்கூட இங்கு அதிகபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 ரூபாய்தான் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆக, ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை என்பது 5 ரூபாய்க்குள்தான் வரும்.
அதேசமயம், ‘சீராக மின்சாரம் கிடைக்க வேண்டுமென்றால், கூடுதல் விலை கொடுத்து வெளியில் வாங்க வேண்டும்’ என்ற நடைமுறை எதார்த்தமும் புரிகிறது. ஆனாலும் அதற்காக, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 35 ரூபாய் என்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
ஒரு முறை இந்த விலைக்கு நாம் வாங்கிவிட்டால், இதுவே மோசமான முன்னுதாரணமாகிவிடும். எனவே, இந்த ஒப்பந்தத்தைத் தமிழக அரசு, மறுபரிசீலனை செய்து குறைவான தொகைக்கு மின் கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார் தெளிவாக.
இதையடுத்து, மின் கொள்முதல் குறித்தான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் பேசியபோது,
“மின் தயாரிப்பில் மொத்த சுய உற்பத்தித்திறன் என்பது 5,350 மெகாவாட். இதில், தற்போதுவரை நமக்கு 4,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இதேநேரம் 50%-ஆக இருந்த சுய உற்பத்தித்திறன் தற்போது 73%-ஆக அதிகரித்திருப்பதற்குக் காரணம் கடந்த ஐந்து மாத ஆட்சியில் நாம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்தான்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த மின் தேவை, தற்போது மிகவும் அதிகரித்திருக்கிறது. அடுத்து ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் எனப் பண்டிகை நாள்களும் தொடர்ச்சியாக வருகின்றன. இந்த நிலையில், அதிகரித்துவரும் மின் தேவையை ஈடுகட்ட நாம் வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தாக வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.
தமிழக அரசின் மின் கொள்முதலுக்கான நீண்டநாள் ஒப்பந்தம் என்பது கடைசியாக2013-ம் ஆண்டு போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் 2027-ல்தான் முடிவடைகிறது. இடைப்பட்ட காலத்தில் நீண்டகால ஒப்பந்தம் எதுவும் போடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. எனவேதான், இந்த மாத இறுதிக்குள்ளாகவே நாம் நீண்டகால ஒப்பந்தங்கள் சிலவற்றை மேற்கொள்ளவிருக்கிறோம்.
ஏற்கெனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களிலேயேகூட, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால்தான், முழுமையான கொள்முதலை நாம் மேற்கொள்ள முடியவில்லை. உதாரணமாக என்.எல்.சி-யிலிருந்து 1,000 மெகாவாட் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும். ஆனால், அவர்களது உற்பத்தியே 500 மெகாவாட்தான் எனச் சொல்லும்போது, மீதமுள்ள 500 மெகாவாட் மின்சாரக் கொள்முதலுக்கு வேறு வழிகளைத்தான் நாம் நாட வேண்டியிருக்கிறது. இது மட்டுமல்ல, தேசிய மின் தொகுப்பிலிருந்தும் நமக்கு சீராக மின்சாரம் கிடைப்பதில்லை. இப்போதும்கூட அங்கு மின்சாரம் இல்லை. அதனால்தான் தேசிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. உதாரணமாக மகாராஷ்டிராவில் காலை - மாலை எத்தனை மணி நேரம் பவர்கட் செய்யப்படும் என்பதை அறிவிப்பாகவே வெளியிட்டுவிட்டார்கள். கேரளா, கர்நாடகாவிலும் பவர்கட் பிரச்னை தொடர்கிறது.
ஆனால், நாம் அப்படி பவர்கட் செய்ய வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில்தான் நிலைமையைச் சமாளிக்க வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்கிறோம். அதிலும்கூட ‘தமிழ்நாடு மட்டும்தான் யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்கிறது’ என்பது போன்ற பூதாகரத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களும் இதே விலையில் வாங்கிக்கொண்டிருக்கின்றன.
இதுநாள்வரை மின்வாரியமும், உற்பத்தி நிறுவனங்களும் மட்டுமே தங்களுக்குள் பேசி கொள்முதல் செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி, எந்தவொரு கொள்முதல் என்றாலும், முறைப்படி டெண்டர் விட்டே செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான நடைமுறையை த.வெ.க அரசில்தான் கொண்டு வந்திருக்கிறோம். அதனால்தான் இந்தத் தொகை குறித்தும் வெளியில் தெரியவந்திருக்கிறது” என்றார் விளக்கமாக.
ஆயிரம் விளக்கங்களைச் சொன்னாலும், விலையேற்றம் மக்கள் தலையில்தானே விடியும்?