ஒகேனக்கல் ஆற்றில் 12வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை
ஒகேனக்கல் ஆற்றில் 12வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,500 கனஅடியாக உள்ளது. பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசல் ஓட்டுபவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, காவிரி ஆற்றில் வியாழக்கிழமை காலை நீர்வரத்து 6,500 கனஅடியாக உள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன.
காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்ந்து 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் பரிசல் ஓட்டுபவர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.