`பாஜகவை நெருங்குகிறதா திமுக?'
`பாஜகவை நெருங்குகிறதா திமுக?' - நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கப்போகும் முடிவு என்ன?
சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்றதும், "நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை" என்று அவர் வெளிப்படையாக அறிவித்ததும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட 'இந்தியா' கூட்டணியில் திமுகவும், அதன் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக முக்கியமான தூண்களாகச் செயல்பட்டனர்.
கொள்கை ரீதியாகவும் பாராளுமன்றத்திலும் பாஜக-வுக்கு எதிரான உரத்த குரலாகத் திகழ்ந்த திமுக, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் முதன்மைச் சக்தியாகப் பார்க்கப்பட்டது.
இருப்பினும், சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா?
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அதிகாரபூர்வமாக இணைந்தது.
இடையில் எழுந்த அரசியல் அதிர்வலைகளால், 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்களை திமுக புறக்கணிக்கத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஆகஸ்ட் 14) சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்றதும், "நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை" என்று அவர் வெளிப்படையாக அறிவித்ததும் விவாதத்தக் கிளப்பி இருக்கிறது.
'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை'!
``திமுகவின் நிலைப்பாட்டில் நாம் பல்வேறு நடவடிக்கைகளைக் காண்கிறோம். அதே வேளையில், பாரதிய ஜனதா கட்சியினரிடமும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிகிறது. உதாரணத்துக்கு, 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' என்ற கூற்றைச் செய்தியாளர் சந்திப்பிலேயே வானதி சீனிவாசன் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் இரு பெரும் திராவிட இயக்கங்களும் பிரதமர் வேட்பாளர் எவருமின்றித் தனித்துப் போட்டியிட்ட இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பெரும் தோல்வியையே தழுவியுள்ளன. முதலாவதாக, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்திருந்தது.
'மோடியா அல்லது இந்த லேடியா?' பிரசாரம்
மறுபுறம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டாலும், செல்வி ஜெயலலிதா அவர்கள் 'மோடியா அல்லது இந்த லேடியா?' என்ற வியூகத்தை முன்வைத்தார். அதன் விளைவாக, களத்தில் திமுக பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. 37 தொகுதிகளில் அஇஅதிமுக வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கன்னியாகுமரியில் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களும், தருமபுரியில் அன்புமணி அவர்களும் வெற்றி பெற்றனர்.
2014 - 2024 தேர்தல்
இதே போன்றதொரு நிலை 2024-ஆம் ஆண்டிலும் உருவானது. அஇஅதிமுக பிரதமர் வேட்பாளர் எவருமின்றித் தனித்து நின்று அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது. எட்டுத் தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. எனவே, 2014 மற்றும் 2024 ஆகிய இரு தேர்தல்களும் ஒரு பாடத்தைப் புகட்டுகின்றன. எவ்வளவு பெரிய திராவிட இயக்கமாக இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் முடிவு என்னவாகும் என்பதற்கு இவையே சான்றுகள்.
இருப்பினும், இத்தகைய சூழலிலும் மக்கள் ஏதேனும் ஒரு திராவிட இயக்கத்தை மட்டுமே புறக்கணித்துள்ளனர். 2014-இல் அஇஅதிமுக தப்பியது; திமுக வீழ்ந்தது. 2024-இல் கூட்டணியோடு இருந்த திமுக தப்பியது; அஇஅதிமுக வீழ்ந்தது. இக்கணிப்புகள் அனைத்தும் விஜய் அவர்களின் அரசியல் வருகைக்கு முந்தைய நிலைமையாகும். இப்போது போட்டியில் விஜய் அவர்களும் இணைந்திருக்கிறார்.
திமுகவிற்கு இரட்டை எதிரிகள்
திமுக தற்போது இந்திய அளவிலான கூட்டணியில் உறுதியாக இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருப்பினும், கூட்டணி தர்மத்திற்கு எதிரான செயல்பாடுகளே முதன்மையானவை. இதனால் திமுகவிற்கு தற்போது இரட்டை எதிரிகள் உருவாகியுள்ளனர். முதலாவது, காலம் காலமாக எதிர்த்து வரும் வலதுசாரி எதிர்ப்பு அரசியல் (பாஜக எதிர்ப்பு). இரண்டாவது, காங்கிரஸுக்கு எதிரான துரோகங்களுக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடி. இவ்விரண்டில் முதன்மை எதிரி யார் என்ற குழப்பம் அவர்களுக்குள் எழுந்துள்ளது.
மூன்றாவது அணியை உருவாக்குமா திமுக?
இவ்விரு எதிரிகளையும் நோக்கும்போது, காங்கிரஸ் கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. எனவே, சிறிய அளவிலான சமரசத்தை திமுக மேற்கொண்டு பாஜகவை நெருங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இல்லையென்றால் மூன்றாவது அணியை உருவாக்கி அகில இந்திய அளவில் காங்கிரஸைப் பலவீனப்படுத்தி பாஜகவிற்கு உதவும்.
மாநிலத்தில் நீட் தேர்வுக்கான போராட்டம், தொகுதி மறுவரையறை விவகாரம் எனப் பல நிகழ்வுகள் நடைபெற்றாலும், திமுக தனது தொண்டர்களை நேரடியாகப் போராட்டக் களத்தில் இறக்கவில்லை.
மென்முறைக் கையாளலின் ஓர் அங்கமே!
அறிக்கைகள் மற்றும் முரசொலி கட்டுரைகள் வாயிலாக மட்டுமே தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறது தவிர, களத்தில் பாஜகவிடம் தீவிரமான எதிர்ப்பைக் காட்டவில்லை.
தவெகவின் 100 நாள் சாதனைப் பட்டியல் ஒருபுறமிருக்க, இக்காலகட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மீதான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே தவெக போன்ற புதிய வரவுகள் தங்களை வேட்டையாடக் காத்திருக்கும் வேளையில், பாஜகவை வீணாகப் பகைக்கக் கூடாது என்ற மென்மையான போக்கையே திமுக கையாண்டு வருகிறது. ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதும் இத்தகைய மென்முறைக் கையாளலின் ஓர் அங்கமே.
பின்னடைவை ஏற்படுத்தலாம்!
பாஜக தரப்பைப் பொறுத்தவரை, நேற்று வரை திமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்துவிட்டு திடீரென அவர்களோடு கை கோப்பது பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனால் பாஜகவிற்கு இதுவரை விழுந்த வாக்குகளில் திமுகவை பிடிக்காத வாக்குகள் அண்ணாமலை பக்கம் சென்றுவிடும். மேலும் தவெக கட்சி சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக வலதுசாரிகள் கருதுவதால், தவெக பக்கம் பாஜக செல்வது கடினம்.
திமுக மற்றும் பாஜக இடையே உடனடி கூட்டணி அமையாவிட்டாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்போதைக்கு பாஜகவுடன் ஒரு மென்மையான அணுகுமுறையையே திமுக கையாண்டு வருகிறது என்பதே களத்தின் தற்போதைய நிலையாகும்" என்று விளக்கினார்.