பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தவெக அரசு முன்னோடியாக உள்ளது: முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை: ''பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில், த.வெ.க., அரசு முன்னோடியாக உள்ளது,'' என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வரும், தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன் மொழிந்து, முதல்வர் விஜய் பேசியதாவது: கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும், தமிழக பெண்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. அரசியலிலும் அவர்கள் முன்னேற, உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்; இதை, சலுகை தருவதாக நினைத்து விடக்கூடாது; சமூக நீதி சார்ந்தது.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால், கடந்த சட்டசபையில் 12 பெண் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். இப்போது, சட்டசபையில் 23 பெண்கள் இருக்கின்றனர். ஆனாலும், சதவீத கணக்குப்படி பெரிதாக உயரவில்லை.
மத்திய அரசு கடந்த 2023ல், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்கு என்பதை கட்டாயமாக்கி, 2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதை தொடர்ந்து தொகுதி மறுவரையறை பணிகளுக்கு பின் தான், முழுமையாக அந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலதாமதத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது.
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில், த.வெ.க., அரசு முன்னோடியாக உள்ளது. தற்போது, தமிழகத்தில் நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதால், பெண்களின் தலைமை பண்பு நிரூபிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா, சட்டசபைகளில் அவர்களின் பங்களிப்பை விரிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. எனவே, 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த, இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா, மத்திய அரசால் கடந்த ஏப்ரல் மாதம் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டு, தோல்வியில் முடிந்தது. அதை மீண்டும் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, மாநிலங்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக தொகுதிகள் வழங்கினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், தென் மாநில எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறையும்.
மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களின் பொருளாதார முன்னேற்றத்தை, அப்படியே நிலை நிறுத்த வேண்டும். இதற்காக, தற்போதுள்ள 543 எம்.பி.,க்கள் என்ற எண்ணிக்கையை நிரந்தரமாக அப்படியே வைக்க வேண்டும்.
பெண்களுக்காக 33 சதவீத இடஒதுக்கீட்டை, வரும் 2029 லோக்சபா தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை, அனைத்து கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.