📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 22, 2026 03:00 PM

பசிப்பிணி போக்கிய பள்ளிக்கூடங்கள்: காமராஜரின் மதிய உணவு முதல் காலை உணவுத் திட்டம் வரை

பசிப்பிணி போக்கிய பள்ளிக்கூடங்கள்: காமராஜரின் மதிய உணவு முதல் காலை உணவுத் திட்டம் வரை

பசிப்பிணி போக்கிய பள்ளிக்கூடங்கள்: காமராஜரின் மதிய உணவு முதல் காலை உணவுத் திட்டம் வரை - ஒரு வரலாற்றுப் பார்வை

பள்ளி மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Published : September 22, 2026 at 1:24 PM IST

-By எஸ். ஹுசேன்

குழந்தைகள் தவறாமல் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கவும், வகுப்பறையில் பசியின்றி கல்வி கற்க உதவவும், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு காலகட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான உணவுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மதிய உணவுத் திட்டமாக தொடங்கிய இந்தப் பயணம், சத்துணவுத் திட்டமாக வளர்ந்து, காலை உணவுத் திட்டமாக விரிவடைந்துள்ளது.

காலை உணவு திட்டம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறும் முதல்வர்#breakfastscheme | #KamarajarBreakfastScheme | #cmvijay | #tngovernment | #KalaiUnavuThittam | #ETVBharatTamilNadu pic.twitter.com/rXsrdgoqJb

காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டம்

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், தொடக்கக் கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 1957ஆம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1962ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர், 1982ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், மதிய உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது.

சத்துணவில் முட்டை அறிமுகம்

குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்தை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சத்துணவுத் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, 1989ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சத்துணவில் முட்டை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை கருத்தில் கொண்டு, பள்ளி உணவுத் திட்டம் தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் மேம்படுத்தப்பட்டு வந்தது.

காலை உணவுத் திட்டமாக அடுத்தகட்ட நகர்வு

இந்த வரிசையில், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

காலை நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உள்ள வயிற்றுப்பசியை போக்கி, அவர்கள் வகுப்பறையில் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்

இதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ஆம் தேதி, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் பிறகு கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் நாள் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த விரிவாக்க நிகழ்ச்சியை சென்னையில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் அரசு பள்ளிகளைத் தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் காலை உணவுத் திட்டத்தின் பயனைப் பெறும் நிலை உருவானது.

6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு விரிவாக்கம்

இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு, காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுகின்றனர்

பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியின்றி கல்வி பயில்வதை உறுதி செய்யவும், அவர்கள் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தும் வகையிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் தலைமையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ.724 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 447 பள்ளிகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவைத் தயாரித்து வழங்குகின்றனர்.

44,984 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

பள்ளி மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் உணவுத் தரம் குறித்து அறிவுறுத்தல்

காலை உணவுத் திட்டத்திற்கான சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம், அடுத்தடுத்த ஆட்சிகளில் சத்துணவுத் திட்டமாகவும், பின்னர் காலை உணவுத் திட்டமாகவும் விரிவடைந்து வந்த நிலையில், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் அதன் அடுத்தகட்ட விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது