பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்துவது தேர்தல் வெற்றியை செல்லாததாக ஆக்காது : ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் மனு
சென்னை: 'என் வெற்றியை செல்லாததாக ஆக்க, தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியது மட்டுமே ஒரு காரணமாக அமையாது' என, முதல்வர் விஜய் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்குகளை நிராகரிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குழந்தைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக, என் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியாது.
தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளை பயன்படுத்த, அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, 2024 பிப்ரவரியில் தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை, வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது.
தேர்தல் செலவு கணக்கையும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதற்கு, எந்த ஆதாரங்களும் இல்லை.
யார் செலவு செய்தனர்; எப்போது பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விபரங்கள் எதுவும் தேர்தல் வழக்குகளில் குறிப்பிடப்படவில்லை.
வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை. எனவே, எனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.