பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலை: தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் போலீஸ்
தாம்பரம்: திருநீர்மலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அன்பழகனை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன்(45). விசிக மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று மாலை திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது 3 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் விரைந்து வந்த மருத்துவப் பணியாளர்கள் அவரை பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிந்தது.
தகவலறிந்த சங்கர் நகர் போலீஸார் அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பிய 6 பேர் கும்பலை தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.