📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 11:04 PM

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் - கோப்புப் படம்

மும்பை: டாடா சன்ஸ் தலைவர் பதவியை என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்தார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றிவிட்டேன். பெரு மதிப்புக்குரிய இந்த நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகளாக எனது பங்களிப்பைச் செலுத்தியது மனநிறைவைத் தருகிறது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் குழுமத்தினை தலைமையேற்று நடத்தியது என்பது மிகுந்த கவுரவுமும், மிகப்பெரிய பொறுப்பும்கூட” எனத் தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரனின் பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடைகிறது. இந்நிலையில், அவர் தனது அறிக்கையில், “எனக்கு அடுத்ததாக இந்தப் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை விரைவில் முடிவு செய்யும்படி நிர்வாக வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அதன்மூலம் பொறுப்பு கைமாறுதல் சுமுகமாக நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாடா பங்குகள் சரிவு:

டாடா சன்ஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்த சில நிமிடங்களில் டாடா க்ரூப் கம்பெனிகளான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் கம்பெனிகள் பங்குகள் சரிவைச் சந்தித்தன. காலை 11.30 மணி நிலவரப்படி டாடா பவர் பங்குகள் 1.26%, டிசிஎஸ் பங்குகள் 3.9%, டாடா ஸ்டீர் பங்குகள் 1.83% அளவில் சரிந்திருந்தன.

என்.சந்திரசேகரன் ராஜினாமா ஏன்?

டாடா ட்ரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா மற்றும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 2027-க்குப் பின்னர், சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக நீட்டிக்க ஒருமனதான ஆதரவு எட்டப்படவில்லை. அதற்கு நோயல் டாடாவின் எதிர்ப்பே காரணம். இதனாலேயே என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்திருக்கிறார்.

இதுவும் என்.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதுபற்றி அந்த அறிக்கையில், “சர் டோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியன ஏகமனதாக என்னை பிப்ரவரி 20, 2027-க்குப் பின்னரும் டாடா சன்ஸ் தலைவராக இருக்கும்படி பரிந்துரைத்தன.

இதை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவும் (Nomination and Remuneration Committee - NRC) ஏற்றுக் கொண்டது. இந்தப் பரிந்துரை டாடா சன்ஸ் போர்டுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் உறுப்பினர்களில் ஒருவர் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருமனதாக ஆதரவு இல்லாத நிலையில், நான் ராஜினாமா முடிவை எடுத்தேன்” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

நோயல் டாடாவின் பெயர் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமல் இருந்தாலும், அது நோயல் டாடா தான் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாரிசு வளர்ச்சிக்காகவா?

டாடா சன்ஸ் - டாடா ட்ரஸ்ட்ஸ் இடையேயான முட்டல் மோதலுக்கு ஒரு வாரிசு வளர்ச்சிப் பின்னணியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது டாடா ட்ரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா, தனது மகன் நெவில் டாடாவுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தில் கூடுதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே அவர் 2027 பிப்ரவரிக்குப் பின்னர் என்.சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கூடவே நிர்வாகக் குழு உறுப்பினர்கள், குழுமங்களின் வணிக உத்திகள், பங்குதாரர் சப்பூர்ஜி பலோன்ஜி வெளியேறுவது உள்ளிட்ட விவகாரங்களிலும் கருத்து மோதல்கள் இருந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

யார் இந்த சந்திரசேகரன்?

என்.சந்திரசேகரன் 1987-ல் டாடா க்ரூப்பில் பணியில் இணைந்தார். டாடா சன்ஸ் நிறுவனமானது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியாவை நிர்வகிக்கிறது.

படிப்படியாக வளர்ந்த என்.சந்திரசேகரன் 2009-ல் டிசிஎஸ் சிஇஓ ஆனார். 2017-ல் டாடா சன்ஸ் தலைவரானார். இந்தப் பதவிக் காலத்தில் இதுவரை ஏர் இந்தியா விமான விபத்து, சர்வதேச சந்தை அழுத்தத்தால் டிசிஎஸ்-ல் ஐடி சேவை கட்டணங்களை குறைக்க வேண்டிய நிர்பந்தம், ஜாகுவார் லேண்ட் ரோவரில் சைபர் தாக்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.