த.வெ.க., கூட்டணிக்கு த.மா.கா., ஆதரவு
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக, த.வெ.க., அரசு விளங்குகிறது. காமராஜரை கொள்கை தலைவராக ஏற்று செயல்படும் முதல்வர் விஜய், மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க தொடங்கி உள்ளார்.
இதன் வாயிலாக, காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு, வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, த.வெ.க., அரசின் துாய முயற்சிக்கு, மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில், த.வெ.க., கூட்டணிக்கு த.மா.கா., ஆதரவளிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, மேலும் பல சிறிய கட்சிகள், இடைத் தேர்தலில் த.வெ.க., கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளன. தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் விஜய் முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், த.வெ.க.,வில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.