📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 20, 2026 09:04 PM

தெலுங்கானா: தலைமை ஆசிரியையை கொன்று ரூ.4 லட்சம் கொள்ளை

தெலுங்கானா: தலைமை ஆசிரியையை கொன்று ரூ.4 லட்சம் கொள்ளை

தெலுங்கானா மாநிலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவர்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரமாரி தாக்குதல்

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கண்டமலே பள்ளி, ஜே.பி. காலனியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ரூபா ரெட்டி என்பவர் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி ரூபா ரெட்டியை மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக தாக்கி, கொடூரமான முறையில் கொலை செய்தனர். மேலும், கொலைக்கு பிறகு அவரிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் திருடி தப்பியதாக கூறப்படுகிறது.

50 பேரிடம் விசாரணை

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஆசிரியையின் கணவர் உள்ளிபட 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

மாணவர்கள் துணிகரம்

போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தலைமை ஆசிரியை பணியாற்றிய பள்ளியில் படித்த மாணவர்கள் 2 பேர் சேர்ந்து இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவர், குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கைதான மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களே தலைமை ஆசிரியையை திட்டமிட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.