தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க கோரிய வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க கோரிய வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஓதுவார்கள் குடமுழுக்கு சடங்குகளில் அனுமதிக்கப்படாமல், தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பாட அனுமதிக்கப்படுகின்றனர். இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published : September 25, 2026 at 11:00 AM IST
மதுரை: சம எண்ணிக்கையிலான வேள்வி குண்டங்கள் அமைத்து, தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம எண்ணிக்கையிலான வேள்வி குண்டங்கள் அமைத்து தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த கோவையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக அளித்திருந்த மனுவில் அவர் கூறியதாவது, "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா, குடமுழுக்கிற்கு முன், இடை மற்றும் மண்டல பூஜையின் போது தமிழ் வேள்வி ஆசிரியராக வேள்வி குண்ட நிகழ்வுகளை நடத்த சம வாய்ப்பு வழங்குமாறு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். என் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கோயிலில் தகுதியான ஸ்தானிக பட்டர்கள் மற்றும் ஓதுவார்கள் உள்ளனர். குடமுழுக்கு விழாவின் போது வேள்விகள் முன்பும், பின்பும் நடத்தப்பட்டது போல இத்தகுதியான நபர்களாலேயே நடத்தப்படும் என்று கூறி என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன். அதில், திருக்குடமுழுக்கு வேள்வி நிகழ்வுகளின் முழு காலத்திலும் சமஸ்கிருத யாக குண்டங்களுக்கு இணையாகச் சம எண்ணிக்கையிலான வேள்வி குண்டங்களில் தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நிவாரணம் வழங்க முடியாது என கூறியுள்ளார்.
குடமுழுக்கு சமஸ்கிருத மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஓதுவார்கள் குடமுழுக்கு சடங்குகளில் அனுமதிக்கப்படாமல், தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பாட அனுமதிக்கப்படுகின்றனர். இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அமர்வு, கோயில்களில் தமிழ் மந்திரங்கள் ஓதுவதற்கு ஆகமங்களிலோ, சமய நூல்களிலோ எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பளித்ததை நீதிபதி கவனத்தில் கொள்ள தவறிவிட்டார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்திரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் மேற்கோள் காட்டி இருக்கும் தீர்ப்பை தங்களில் ஒருவர் பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.