தமிழ் வழியில் படித்த காவலருக்கு நியாயமான உரிமை கிடைக்க நடவடிக்கை: தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழ் வழியில் படித்த காவலருக்கு நியாயமான உரிமை கிடைக்க நடவடிக்கை: தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை:.“வி தி லீடர்ஸ்” அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவு: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு ”தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்” கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1 போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
உதவி ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் கீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, பிஎஸ்டிஎம் சட்டத்தின்படிவழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது.
கடந்த ஆண்டு, நடைபெற்ற 1352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு பிஎஸ்டிஎம் முன்னுரிமை வழங்கப்படவில்லை. காரணம், ”ஏற்கனவே அரசு ஊழியர்கள்” என்பதே. ஆனால், பிஎஸ்டிஎம் சட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இந்த முன்னுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, கடந்த ஆட்சிக் காலத்தில், 23.1.226 அன்று, தமிழக அரசு திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால், உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 28.8.2026 அன்று நடைபெறவுள்ளது. எனவே, தவெக அரசு, தமிழ்நாடு சட்ட முன்வடிவு மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழக காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, பிஎஸ்டிஎம் முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.