வெளிநாட்டினர் எவரும் இலவசமாக நன்கொடை தருவதில்லை; சட்ட நிபுணர் ஹரிஷ் சால்வே காட்டம்
புதுடில்லி: ''இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு நன்கொடைகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்'' என முன்னணி சட்ட நிபுணர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
இது குறித்து ரிபப்ளிக் சேனலுக்கு சட்ட நிபுணர் ஹரிஷ் சால்வே அளித்த பேட்டி: நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யும் வகையில் தவறான கருத்துகளைத் திணிக்கக் கூடாது; இந்தியாவின் வளர்ச்சியைத் திசைதிருப்பும் செயல்களைத் தடுத்திட எப்.சி.ஆர்.ஏ., சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு நிதியுதவிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். எந்த நன்கொடையும் இலவசமாக வருவதில்லை. அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எனவே, வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை கண்காணிக்காமல், இறையாண்மை கொண்ட எந்த ஒரு நாடும் அலட்சியமாக இருக்க முடியாது.
மற்ற நாடுகள் காட்டும் அதே தீவிரத்துடன் இந்தியாவும் அதையே செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பணம் உள்ளே வருகிறதா என்பது பிரச்னை அல்ல, மாறாக அது வந்தவுடன் என்ன நோக்கத்திற்குப் பயன்படுகிறது என்பதே பிரச்னை. இந்தியாவில் இப்போது விவாதம் நடத்தாமல் இருப்பது ஒரு நாகரிகமாகிவிட்டது. இவ்வாறு ஹரிஷ் சால்வே கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பப்படும் பணத்தை, இந்தியத் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் எவ்வாறு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதை எப்.சி.ஆர்.ஏ., சட்டம் நிர்வகிக்கிறது. இந்த சட்டத்தை கடுமையாக்கும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்துடன் தான், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லியை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன. இந்த சூழலில் எப்சிஆர்ஏ விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என சட்ட நிபுணர் ஹரிஷ் சால்வே தெரிவித்து உள்ளார்.