வெங்காயம் விற்பனை துவக்கம் :ரேஷன் கடை ஊழியர்கள் 'கண்ணீர்'
திருப்பூர்:ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை நேற்று முதல் துவங்கியது. வெளி மார்க்கெட்டில் எந்த விலை உயர்வும் இல்லாத நிலையில், கார்டுதாரர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், வெங்காய விற்பனையில் எழும் சிக்கல்கள் கடை ஊழியர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
நகரப்பகுதி ரேஷன் கடைகளில், ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ, 35 ரூபாய் வீதம் விற்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கிலோவிற்கு மேல் தரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. வெங்காயம் ஒரு மூட்டை 50 கிலோ எடையில் உள்ளது. இதில் அழுகிய வெங்காயம் உள்ளது. பெரிய வெங்காயம் என்பதால் ஒரு கிலோ முழுமையாக எடையிட்டு தர முடியவில்லை. ஒரு கிலோவுக்கு 50 முதல்100 கிராம் ஏறத்தாழ இருக்கும்.
இந்த எடை வித்தியாசத்தை எப்படி ஈடு கட்டுவது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. கடைக்கு வந்த வெங்காய மூட்டை ஒரே நாளில் விற்னையாகாது. மேலும், நாளை (இன்று 4ம் தேதி விடுமுறை), 5ம் தேதி இல்லம் தேடி ரேஷன் பொருள் வழங்கும் நாள். இதனால் கடையில் வெங்காயத்தை மூட்டையாக வைப்பதில் பிரச்னை. அழுகிய வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவர்.
இது தவிர தற்போது வெளிச்சந்தையில் 35 முதல் 40 ரூபாய்க்கு தரமான வெங்காயம் விற்பனையாகிறது. எந்த விதமான விலை உயர்வும் இல்லாத நிலையில் இதை ஏன் திணிக்கிறீர்கள் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. கடைசியில் எல்லாப் பிரச்னையும் கடை ஊழியர்கள் தலையில் தான் வந்து விழுகிறது.
இவ்வாறு அவர்கள் 'கண்ணீர்' வடிக்கின்றனர்.