வீடியோ காலில் அழைத்து வங்கி பெண் அதிகாரி தூக்கில் தற்கொலை: அதிர்ச்சியில் கணவனும் உயிரை மாய்த்தார்
வீடியோ காலில் அழைத்து வங்கி பெண் அதிகாரி தூக்கில் தற்கொலை: அதிர்ச்சியில் கணவனும் உயிரை மாய்த்தார்
திருவனந்தபுரம்: கேரளாவில் கணவனுக்கு வீடியோ கால் செய்து வங்கி அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் கணவன் ஓட்டல் அறையில் உயிரை மாய்த்துக் கொண்டார். திருமணமான 8 மாதத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரிட்டி பகுதியை சேர்ந்தவர் அமல் (27). அதேபோல் காசர்கோடு மாவட்டம் பூச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அனுஸ்ரீ (25). இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. 2 பேரும் வங்கி ஊழியர்கள் ஆவர். அனுஸ்ரீ கர்நாடக மாநிலம் மைசூரு அருகே ஹுன்சூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையிலும், அமல் எர்ணாகுளத்தில் உள்ள வங்கியிலும் பணிபுரிந்து வந்தனர்.
அமல் எர்ணாகுளத்தில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். 2 பேரும் தினமும் வீடியோ காலில் பேசிக் கொள்வது வழக்கம். நேற்று கணவனை வழக்கம்போல அனுஸ்ரீ வீடியோ காலில் அழைத்துப் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 2 பேரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய அனுஸ்ரீ கேமராவை ஆன் செய்த படியே தூக்கு மாட்டிக் கொண்டார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அமல், ஓட்டல் அறையில் வைத்து அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அனுஸ்ரீயின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஹுன்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.