📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 11, 2026 05:04 AM

விபி ஜி ராம் ஜி திட்டம்.. அமலான முதல் மாதத்திலேயே மொத்த ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு

விபி ஜி ராம் ஜி திட்டம்.. அமலான முதல் மாதத்திலேயே மொத்த ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு

கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNERA) பதிலாக மத்திய அரசு, விபி ஜி ராம் ஜி திட்டத்தை கொண்டு வந்தது.

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும், திட்டத்திற்காக மத்திய - மாநில நிதி பங்கீட்டில் மாற்றம் செய்தும்,வேலை நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தியும் கொண்டுவரப்பட்ட இந்த விபி ஜி ராம் ஜி திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.

இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கும் திட்டத்தின் பிற அம்சங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் முந்தைய திட்டத்தை விட விபி ஜி ராம் ஜி திட்டம் ஊரக வேலைவாய்ப்பு வழங்குவதில் தொய்வை கண்டுள்ளதாக திட்டம் அமலான கடந்த ஜூலை மாதத்திற்கான தரவுகள் தெரிவிக்கின்றன.

MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தபோதும் புதிய திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாத முடிவில், ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு அமலில் இருந்த MGNREGA இன் கீழ் இதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலை நாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு அமலான விபி ஜி ராம் ஜி-யின் கீழ் மொத்த வேலை நாட்கள் 7.67 கோடியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் 68.94 லட்சம் குடும்பங்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட 49.94 சதவீதம் குறைவாகும்.

ஆனால் திட்ட மாற்றத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மறுத்துள்ளது. ஜூலை 22 வரை வேலை கோரிய தொழிலாளர்களில் 99.5% பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் ஜூலை 22 க்கு பின் மாத இறுதியில் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள், ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமடைந்ததை சுட்டிக்காட்டுகின்றன.

அதாவது, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, கடந்த ஆண்டை விட சரிபாதி அளவுக்கு வேலை நாட்களின் அளவு சரிந்துள்ளது.

இந்த வீழ்ச்சி புதிய திட்டத்திற்கு மாறியதால் ஏற்பட்ட தற்காலிகத் தேக்கமா அல்லது கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பொதுவான மந்தநிலையா என்பது வரும் மாதங்களின் தரவுகள் மூலமே தெரியவரும்.