📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 28, 2026 01:31 AM

எளாவூர் சோதனைச்சாவடி கடைகள் பொது ஏலம் 8 ஆண்டுகளாக அரசியல் குறுக்கீடுகளால் இழுபறி அவசர தேவைகள் கூட கிடைக்காமல் தவிக்கும் வாகன

Politics

எளாவூர் சோதனைச்சாவடி கடைகள் பொது ஏலம் 8 ஆண்டுகளாக அரசியல் குறுக்கீடுகளால் இழுபறி அவசர தேவைகள் கூட கிடைக்காமல் தவிக்கும்...

Google News Tamil Politics

கும்மிடிப்பூண்டி, மே 28–

கும்மிடிப்பூண்டி அருகே, மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் கட்டப்பட்ட கடைகளுக்கான பொது ஏலம், அரசியல் குறுக்கீடுகளால் எட்டு ஆண்டுகளாக இழுபறியில் இருப்பதால், அவசர தேவைகள் கூட கிடைக்காமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லை முடிந்து தமிழக எல்லை தொடங்கும் இடத்தில், 2018ம் ஆண்டு, போக்குவரத்து துறை சார்பில், 137.18 கோடி ரூபாய் மதிப்பில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.

அந்த சோதனைச்சாவடியில், நகலகம், உணவகம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக, 10 கடைகள் நிறுவப்பட்டன.

அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்ட ஆண்டே, மேற்கண்ட கடைகளுக்கான பொது ஏலத்தை பொது பணித்துறையினர் அறிவித்தனர். ஆனால், ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மறுதேதி அறிவிக்காமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதற்கடுத்த தி.மு.க., ஆட்சியில், 2022ம் ஆண்டு நடந்த பொது ஏலத்தில், அனைத்து கட்சிகளை சேர்ந்த, 40 பேர் பங்கேற்றனர். அப்போதும் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஏலம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

அரசியல் குறுக்கீடுகள் தொடர்வதால், பொது ஏலம் விடும் முடிவை பொது பணித்துறையினர் கைவிட்டனர். அதனால், போக்குவரத்து துறையினர் கடைகளை ஏலம் விட்டு, அதற்கான வாடகையை பொது பணித்துறையிடம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், போக்குவரத்து துறையினர் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

கடந்த இரு ஆட்சி காலத்திலும், அரசியல் குறுக்கீடுகளால், எட்டு ஆண்டுகளாக கடைகள் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கின்றன. சோதனைச்சாவடியில் இருந்து 3 கி.மீ., சுற்றளவுக்கு கடைகள் ஏதும் இல்லை.

அதனால், சோதனைச்சாவடியில் காத்திருக்கும் நுாற்றுக்கணக்கான சரக்கு வாகன ஓட்டுநர்கள், மருந்து, மாத்திரை, உணவு உள்ளிட்ட அவசர தேவைகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியில், எந்த ஒரு அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல், நேர்மையான முறையில் பொது ஏலம் நடத்தி சோதனைச்சாவடி கடைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.