📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 01, 2026 12:04 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

டெஹ்ரான்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.

சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிறிய தீவு பகுதியில் உள்ள ஈரான் ஏவுகணை ஏவும் தளத்தை அமெரிக்கா தாக்கி உள்ளது. இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளது.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை இதனை உறுதி செய்துள்ளது. இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் உயர்ந்துள்ளது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தோம்

லாராக் தீவு பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட அண்மைய தாக்குதலுக்கு பதிலடியாக மேற்காசியாவின் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை ஈரானின் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

லாராக் தீவில் தாக்குதல் மேற்கொள்ள ஜோர்டானில் உள்ள ராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த இடம் மோசமான சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. அதே நேரத்தில் சுமார் 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் கூறியுள்ளது. இருப்பினும் இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை ஜோர்டான் தெரிவிக்கவில்லை.

அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் அல்-மின்ஹாத் ஏர் பேஸில் ட்ரோன்களை பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதோடு அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு

ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேத்தி ஆகியோ​ரும் கொல்லப்பட்டனர். போர் சூழல் காரணமாக கடந்த ஜூலை மாதம் அவரது உடல் ஈரானில் அடக்கம் செய்யப்பட்டது.

தந்தையின் மறைவை அடுத்து ஈரானின் புதிய உச்ச தலை​வ​ராக மோஜ்தபா கமேனி பொறுப்பேற்றார். இருப்பினும் பொது நிகழ்வுகளில் அவர் பங்கேற்பது இல்லை. இத்தகைய சூழலில் இஸ்லாமிய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும். நமது எதிரி யார் என்பதை நாம் அறிய வேண்டும். அந்த புரிதலுடன் அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் திட்டமிட வேண்டும். நமக்கு இடையேயான பிளவு எதிரிகளின் நலன்களுக்கே சாதகமாக அமையும்” என்று மோஜ்தபா வலியுறுத்தி உள்ளார். இதனை ஈரான் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.