📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 14, 2026 10:01 AM

அஜித்தை ஆட்டம் போட வைத்த அனிருத் பாடல்.. அனிக்கு சுத்தமா விருப்பமே இல்லையாம்.. இப்படியும் நடந்ததா?

அஜித்தை ஆட்டம் போட வைத்த அனிருத் பாடல்.. அனிக்கு சுத்தமா விருப்பமே இல்லையாம்.. இப்படியும் நடந்ததா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்கள் எல்லோரின் படங்களுமே அனிருத் ஸ்டூடியோவுக்கு சென்றுவிடுகின்றன. அடுத்ததாக அவரது இசையமைப்பில் ஜெயிலர் 2, தர்மன் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியுடைய சகோதரன் மகன் அனிருத். சிறு வயதிலிருந்தே இசையின் மீது இருந்த ஆர்வத்தை அடுத்து; 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருக்கு சினிமா ஒத்துவருமா என்று பெற்றோர்கள் தயங்கியபோது அவருக்கு சினிமா மட்டும்தான் ஒத்து வரும் நம்புங்கள் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து; அனிருத்தை திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் தனுஷ். அனியும் தனுஷின் நம்பிக்கையை முதல் படத்திலேயே பன்மடங்கு நிரூபித்துவிட்டார். அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.

சென்சேஷனல் இசையமைப்பாளர்: 3 பட இசைக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் இசையமைத்த ஒவ்வொரு படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஹிட்டடிக்க ஆரம்பித்தன. இதனால் படிப்படியாக அவர் உயர்ந்து; அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி முதல் சிவகார்த்திகேயன்வரை அவரது இசை இருந்தால்தான் செட் ஆகும் என்ற மனநிலைமைக்கு வந்துவிட்டார்கள். இதன் காரணமாக அனிருத்தும் குறுகிய காலத்திலேயே டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஹீரோக்கள் மட்டுமின்றி ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்களும் அனிருத் இசைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

விமர்சனமும் உண்டுதான்: அவரது எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்திக்கிறது. ஒரே இசையை வேறு வேறு மாதிரி கொடுக்கிறார் என்ற பேச்சும், அவர் வந்த பிறகுதான் தமிழ் பாடல்களில் வரிகளின் தரம் குறைந்து; சத்தம் மட்டுமே இருக்கிறது என்றும் பலர் சொல்வார்கள். சமீபத்தில் வெளியான KHXRK படத்தின் ப்ரோமோ இசைக்குகூட அதே விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி இளைஞர்களால் அனிருத்தின் இசை கொண்டாடப்படுகிறது.

அஜித்துக்கு சூப்பர் பாட்டு: இதற்கிடையே அஜித்துக்கு பொதுவாக சரியாக பாடல்கள் அமையாது என்ற கூற்று பல காலம் உண்டு. யுவன் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே அவரது படங்களுக்கு அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் ட்யூன்களை வழங்கினார்கள். அந்த வரிசையில் வேதாளம் படத்தின் மூலம் அனிருத்தும் இணைந்தார். ஆலுமா டோலுமா பாடலுக்கு அஜித்தும் அவரது ரசிகர்களும் போட்ட ஆட்டமும் இன்னமும் தியேட்டர்களில் அதிரத்தான் செய்கின்றன. இந்நிலையில் அந்தப் பாடல் குறித்து மனம் திறந்திருக்கிறார் அனிருத்.

அனிருத் பேட்டி: சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஆலுமா டோலுமா பாடல் வெளியாவதையே நான் விரும்பவில்லை. அந்தப் பாடலுக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கும் முதல் நாள் இரவு இயக்குநரை அழைத்து ஷூட்டிங்கை தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இந்தப் பாடல் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகாது என்றுதான் நினைத்தேன். முக்கியமாக அஜித்தின் ரசிகர்கள் இந்தப் பாடலை விரும்பமாட்டார்கள் என்றும் தோன்றியது. இயக்குநரும் ஷூட்டிங்கை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

அஜித்துக்கு பிடித்தது: என்னிடம் அப்படி சொல்லிவிட்டு பாடலையும் ஷூட் செய்துவிட்டார். பிறகு அவர் என்னிடம் பேசியபோது அஜித்திடம் ஃபோனை கொடுத்தார். அஜித்தோ, பாடலை கேட்டுவிட்டு தனக்கு பிடித்துவிட்டதாக கூறினார். அதற்கு பிறகு சந்தோஷத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.