அண்டப்புளுகு.. முதியோர் இல்ல நாடகம்.. 3 பெண்களை ஏமாற்றிய மோகன் சர்மா? குட்டி பத்மினி பேட்டி!
சென்னை: 70, 80-களில் மலையாளத்தின் புகழ்பெற்ற 'சட்டகாரி' படம் மூலம் அறிமுகமாகி, 20-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து, இயக்கி, உச்சக்கட்ட புகழிலும் பணத்திலும் மிதந்தவர் அந்த மூத்த நடிகர் மோகன் சர்மா. சமீபத்தில் அவர், போயஸ் கார்டன்ல வாழ்ந்த என்னோட நிலைமை இப்போ இப்படி ஆயிடுச்சு, உடம்பு சரியில்லாம மாத்திரை வாங்கக் கூட பணமில்லாம முதியோர் இல்லத்துல தங்கியிருக்கேன் என கண்ணீருடன் பேட்டி கொடுத்து இருந்தார்.'
குட்டி பத்மினி பேட்டி: இதெல்லாம் வெறும் நாடகம், அண்டப் புளுகு என பிரபல நடிகை குட்டி பத்மினி வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகர் மோகன் சர்மா பேட்டியில், தென்னிந்திய பிலிம் சேம்பர் எனக்கு எதுவுமே செய்யலை என சொல்லி இருந்தார்.அது பொய், பிலிம் சேம்பர் போன வருஷம்தான் அவருக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை கொடுத்துச்சு. பணத்தையும் வாங்கிக்கிட்டு, யாருமே எனக்கு உதவலன்னு பொய் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது. அவர் சொல்றாரே போயஸ் கார்டன் வீடு... அது யாருடையது தெரியுமா? பிரபல நடிகை லஷ்மியை மோகன் சர்மா திருமணம் செய்து வாழ்ந்தபோது, லஷ்மி தனது சொந்த பணமான 5 லட்சத்தை கொடுத்து போயஸ் கார்டனில் வீடு வாங்கச் சொன்னாங்க. ஆனால், லஷ்மியை ஏமாற்றி மோகன் சர்மா அந்த வீட்டை தன் பெயரிலேயே வாங்கிவிட்டார். வெயில், மழை பாராமல் லஷ்மி உழைத்து சேர்த்த பணத்தைச் சுருட்டியவர் இந்த மோகன் சர்மா.
மூன்று திருமணம்: இந்த விஷயம் பல ஆண்டுகள் கழித்துத்தான் லஷ்மிக்குத் தெரிந்தது. அப்பவே நினைத்திருந்தால் அவரை உண்டு இல்லை என ஆக்கியிருக்கலாம். ஆனால், லஷ்மி பெருந்தன்மையாக இதுவரை அவரை பற்றி தவறாக பேசியதே இல்லை. ஆனால் மோகன் சர்மா, லஷ்மியால்தான் என் வாழ்க்கை கெட்டது என பேசி இருக்கிறார். நடிகை லஷ்மியை பிரிந்த பிறகு, இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்த மோகன் சர்மா அந்த பெண்ணுடனும் வாழவில்லை. அதன் பின் மூன்றாவதாக சாந்தி என்ற பரதநாட்டியக் கலைஞரைத் திருமணம் செய்துகொண்டார். மூன்றாவது மனைவி சாந்தியையும் அடிக்கடி அடித்து, பணம் கேட்டு சித்திரவதை செய்ததால் அவரும் பிரிந்து போய்விட்டார். இப்படி மூன்று பெண்களின் வாழ்க்கையோடு விளையாடி, ஏமாற்றி பணம் சேர்த்தவர்தான் இந்த மோகன் சர்மா .
சாபம் சும்மாவிடாது: அப்போ சாப்பாட்டுக்கே வழியில்லைன்னு சொல்றாரே... இப்போ அவர் காலில் போட்டிருக்கும் செருப்பின் விலையே 6,000 ரூபாய். 6,000 ரூபாய்க்கு செருப்பு போடுபவரிடம் பணம் இல்லையா.... எதுக்கு இந்த நாடகம். மூன்று பெண்களின் வாழ்க்கையை அழிச்ச பாவம் அவரை சும்மா விடாது, அந்தத் தெய்வமே நின்று கொல்லும் என ஆக்ரோஷமா குட்டி பத்மினி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.