அபிஷேக் சர்மா வெறியாட்டம்.. 25 சிக்ஸ்.. 91 பந்துகளில் 233 ரன்கள்.. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
அபிஷேக் சர்மா வெறியாட்டம்.. 25 சிக்ஸ்.. 91 பந்துகளில் 233 ரன்கள்.. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
அமிர்தசரஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, பஞ்சாப் மாநில ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்து இரட்டைச் சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அமிர்தசரஸ் மற்றும் தார்ன் தரன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 50 ஓவர் போட்டியில் அமிர்தசரஸ் அணிக்காக அபிஷேக் சர்மா களம் இறங்கினார். ஆரம்பத்திலிருந்தே எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் அடித்தார்.
எதிரணியின் பந்துவீச்சை இரக்கமின்றி விளாசிய அபிஷேக் சர்மா, 256 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்து இரட்டைச் சதம் அடித்தார். அவரது இந்த இன்னிங்ஸில் 25 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். இவரது இந்த அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 533 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. அணியின் மற்றொரு தொடக்க வீரர் அபய் சௌத்ரி 93 ரன்களும், அபினவ் சர்மா 51 ரன்களும் குவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளைத் தவிர்த்து, அடுத்த 6 போட்டிகளில் மிகக் குறைந்த ரன்களில் அவுட்டாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஜிம்பாப்வே தொடரில் 1, 8 மற்றும் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விமர்சனம் எழுந்தது.
இந்தச் சூழலில், தற்போது அவர் விளாசியுள்ள 233 ரன்கள் அவரது இழந்த ஃபார்மை மீட்டெடுக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் பெரிதும் உதவும். அபிஷேக் சர்மாவின் இந்த வெறித்தனமான இன்னிங்ஸ், 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரேஸில் அவரது பெயரையும் சேர்த்துள்ளது.