இந்தோனீசியாவின் சூரிய சக்தி பண்ணையுடன் இணையும் கெப்பல் எரிசக்தி ஆலை
ஜூரோங் தீவில் உள்ள கெப்பல் மெர்லிமாவ் கோஜென் (கேஎம்சி) எரிசக்தி ஆலை இந்தோனீசியாவில் உள்ள சூரிய சக்தி பண்ணையுடன் இணைக்கப்படவிருக்கிறது.
பசுமை எரிசக்தியை இறக்குமதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடலடி கம்பி வடங்கள் மூலம் எரிசக்தி ஆலையும் சூரிய சக்தி பண்ணையும் இணைக்கப்படும் என்று கெப்பல் சொத்து நிர்வாகி தெரிவித்தார்.
கெப்பலின் எதிர்கால பசுமை இறக்குமதிகளைத் தற்போதுள்ள ஜூரோங் தீவின் எரிசக்தி உள்கட்டமைப்புடன் அது ஒருங்கிணைக்கும் என்று நிறுவனம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) குறிப்பிட்டது.
இந்தோனீசியாவிடமிருந்து 300 மெகாவாட் அளவிலான குறைந்த கரிம வெளியேற்ற மின்சாரத்தை இறக்குமதி செய்துகொள்ள சிங்கப்பூர் எரிசக்தி ஆணையம் கெப்பல் நிறுவனத்திற்கு இதற்குமுன் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியது.
இறக்குமதி செய்யப்படும் அந்த எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் தளமாக கேஎம்சி இருக்கும் என்று கெப்பல் திட்டமிட்டுள்ளது.
ரியாவ் தீவுகளில் உள்ள சூரிய சக்தி ஆலையிலிருந்து 2 கிகாவாட் எரிசக்தி இறக்குமதி செய்யப்படும்.
கரிம வெளியேற்றத்தைக் குறைத்து எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த 2035ஆம் ஆண்டுக்குள் 6 கிகாவாட் குறைந்த கரிம வெளியேற்ற மின்சாரத்தை இறக்குமதி செய்யச் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
இந்தோனீசியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 3 கிகாவாட் பசுமை எரிசக்தியை இறக்குமதி செய்ய எரிசக்திச் சந்தை ஆணையத்திடமிருந்து நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்களில் கெப்பலும் ஒன்று.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இருப்பினும், பசுமை எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவற்றின் உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று இந்தோனீசியா தெரிவித்துள்ளதால் எரிசக்தியை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒழுங்குமுறை சார்ந்த நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.
மேலும், 6.25 கிகாவாட் அளவிலான பசுமை எரிசக்தியை இறக்குமதி செய்ய, எரிசக்திச் சந்தை ஆணையம் வேறு ஏழு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியது.