📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business November 26, 2026 12:02 AM

அரிசி அரவை பணியில் ரூ.11 கோடி முறைகேடு 3 மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை: அதிகாரிகள், ஆலை அதிபர்கள் மீது வழக்கு

அரிசி அரவை பணியில் ரூ.11 கோடி முறைகேடு 3 மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை: அதிகாரிகள், ஆலை அதிபர்கள் மீது வழக்கு

– நமது நிருபர் குழு –

தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், நெல் கொள்முதல் மற்றும் அரிசி அரவைப் பணிகள் மேற்கொண்டதில், 10.84 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில், அதிகாரிகளின் வீடு உட்பட, 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (நவ.,25) சோதனை நடத்தினர்.

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் தனியார் அரிசி ஆலைகளுக்கு அரவைக்காக அனுப்பப்படுகிறது. அங்கு அரவை செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை, வாணிபக் கழகக் கிடங்குகளில் ஒப்படைக்க வேண்டும். இந்த நடைமுறையைப் பயன்படுத்தி, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது, ‘நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய நெல்லை அரைத்து கிடைக்கும் அரிசியை, தனியார் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். பின்னர், ஏற்கனவே ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட்ட பழைய அரிசியை வாங்கி, மீண்டும் வாணிபக் கழகக் கிடங்குகளில் ஒப்படைத்து வந்துள்ளனர்’ என, தெரியவந்தது. அந்த வகையில், நான்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள் வனிதா, தரக் கட்டுப்பாட்டு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகியோர், கடந்த ஆண்டில் இருந்து, 1,792 டன் அளவுக்கு முறைகேடு செய்து, அரசுக்கு, 10.84 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது.

இதனால், அருள் வனிதா, ஜெயவேல் ஆகியோர், ஆகஸ்ட் மாதமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளான அருள் வனிதா, ஜெயவேல் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இம்முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ஒரே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, அரிசி ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள், செங்கல்பட்டில் உள்ள அருள் வனிதா வீடு மற்றும் திருவள்ளூரில் உள்ள ஜெயவேல் வீடு உட்பட, 11 இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, நெல் கொள்முதல், ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட நெல் மூட்டைகள், அரவை செய்யப்பட்ட அரிசியின் அளவு, கிடங்குகளில் ஒப்படைக்கப்பட்ட அரிசி இருப்பு உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களின் தொடர்புகள், ரேஷன் அரிசி வாங்கி தரும் இடைத்தரகர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.