📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 26, 2026 01:03 AM

திருப்பரங்குன்றமா, சிக்கந்தர் மலையா? தமிழக அரசின் ஆய்வறிக்கை எழுப்பும் வரலாற்று மற்றும் சட்டரீதியான கேள்விகள்!

திருப்பரங்குன்றமா, சிக்கந்தர் மலையா? தமிழக அரசின் ஆய்வறிக்கை எழுப்பும் வரலாற்று மற்றும் சட்டரீதியான கேள்விகள்!

– ‘ஆஸ்பயர்’ கே.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும்... அந்தச் சர்ச்சையின் பின்னணியில், தமிழக அரசு வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், தமிழகத்தின் தொன்மையான அடையாளங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம், எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

தீபத்துாண் குறித்த ஆய்வில் தொடங்கிய விவகாரம், இன்று மலையின் பெயர் குறித்த விவாதத்திற்கும் வழிவகுத்துள்ளது.

தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையும், தொல்லியல் துறையும் இணைந்து, ‘டாக்குமென்டேஷன் ஆப் தி கிரேட் ட்ரிகானாமெட்ரிகல் சர்வே ஸ்டேஷன்ஸ் (ஜி.டி.எஸ்.,) இன் தமிழ்நாடு – சம்மரி 2026’ என்ற, 98 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையை முழுமையாக படிக்கும்போது, அதன் அறிவியல் சார்ந்த தகவல்களைத் தாண்டி, அதில் கையாளப்பட்டுள்ள பெயரிடும் முறையும், பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

அடைப்புக்குறிக்குள் திருப்பரங்குன்றம்!

அறிக்கையின், 41 முதல் 46 வரையிலான பக்கங்களில் உள்ள ஆறு படங்களிலும், ‘சிக்கந்தர் மலை (திருப்பரங்குன்றம்)’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சிக்கந்தர் மலை முதன்மைப் பெயராகவும், திருப்பரங்குன்றம் அடைப்புக்குறிக்குள் துணைப் பெயராகவும் இடம்பெற்றுள்ளது.

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாகப் போற்றப்படும் திருப்பரங்குன்றத்தின் பெயர், ஏன் அடைப்புக்குறிக்குள் இடம்பெற வேண்டும்?

ஆய்வின் நோக்கம் ஆங்கிலேயர் கால நில அளவை நிலையங்களை ஆவணப்படுத்துவதுதான் என்றால், ‘Tiruparankundram Hill – GTS Station historically recorded as Sikandarmalai’ அதாவது, ‘திருப்பரங்குன்றம் மலை – ஜி.டி.எஸ்., அறிக்கையில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிட்டுள்ளபடி’ என்றல்லவா குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்?

அவ்வாறு செய்திருந்தால், ஆங்கிலேயர் கால ஆவணங்களின் தகவல்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும்; திருப்பரங்குன்றத்தின் வரலாற்று அடையாளமும் தெளிவாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

சங்க இலக்கியம் என்ன சொல்கிறது?

திருப்பரங்குன்றம் என்ற பெயர், ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த பின் உருவான பெயரல்ல. சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும், திருப்பரங்குன்றத்தின் தொன்மையையும், முருக வழிபாட்டின் சிறப்பையும் எடுத்துரைக்கின்றன. தேவாரப் பாடல்களிலும் திருப்பரங்குன்றம் இடம்பெற்றுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆவணங்களும், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் தேவாரத் தரவுத்தளமும், இந்த வரலாற்று அடையாளத்தை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு நில அளவை நிலையத்தின் பெயரைப் பதிவு செய்வதற்கும், சங்க காலத்திலிருந்து அறியப்படும் ஒரு மலையின் பெயரை முதன்மையாகக் குறிப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

காலனித்துவ ஆவணங்களைப் பாதுகாப்பது வரலாற்று ஆய்வின் ஒரு பகுதி. ஆனால், காலனித்துவ ஆவணங்களின் அடிப்படையில், அதற்கும் முந்தைய வரலாற்று அடையாளத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது சரியான ஆவணப்படுத்தும் முறையா?

அரசின் அறிக்கையே தரும் ஆதாரம்!

இந்த ஆய்வறிக்கையின் 20வது பக்கத்தில் இடம் பெற்றுள்ள அடிக்குறிப்பு மிகவும் முக்கியமானது.

சிக்கந்தர் மலை என்ற பெயர், ஆங்கிலேயர் கால ஜி.டி.எஸ்., அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நில அளவை நிலையத்தின் பெயர் என்பதை, அந்த அடிக்குறிப்பு விளக்குகிறது.

அதே அறிக்கையின் 48வது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பழைய வரைபடத்தில், திருப்பரங்குன்றம் என்ற புவியியல் பெயரும், சிக்கந்தர் மலை என்ற நில அளவை நிலையத்தின் பெயரும் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன.

இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை, அரசின் அறிக்கையே வெளிப்படுத்துகிறது.

மேலும், இதே அறிக்கையின் 60 மற்றும் 79வது பக்கங்களில், திருப்பரங்குன்றம் என்ற பெயர் தனித்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே அரசின், ஒரே ஆய்வறிக்கையில், ஒரே இடத்திற்கு ஏன் வெவ்வேறு பெயரிடும் நடைமுறைகள்?

இது ஆவணத் தொகுப்பில் ஏற்பட்ட கவனக்குறைவா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் காலனித்துவப் பெயருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதா?

இதற்கான விளக்கத்தை அறிக்கையைத் தயாரித்த துறைகள் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

இந்த விவகாரத்தின் மிக முக்கியமான பகுதி இதுதான்...

திருப்பரங்குன்றம் மலையின் பெயர் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஏற்கனவே விசாரித்துள்ளது.

கடந்த, 2025 ஜூன் 24 அன்று, நீதிபதி எஸ். ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில், ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றோ, சமணர் குன்று என்றோ அழைக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஆர். விஜயகுமார், 2025 அக்டோபர் 10 அன்று, பெயர் தொடர்பான விவகாரத்தில் நீதிபதி ஸ்ரீமதியின் கருத்துடன் உடன்பட்டார். W.P.(MD) No.2678 of 2025 உள்ளிட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின், 58 முதல் 63 வரையிலான பக்கங்கள், மலையின் பெயர் குறித்த விரிவான விவாதத்தை கொண்டுள்ளன.

கடந்த, 1908 மற்றும் 1923ம் ஆண்டுகளின் தொல்லியல் பாதுகாப்பு அறிக்கைகள், பழைய சிவில் நீதிமன்றத் தீர்ப்பு, வருவாய்த் துறை ஆவணங்கள், 1931ம் ஆண்டின் பிரிவி கவுன்சில் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

ஆங்கிலேயர் கால வரைபடங்களில், சிக்கந்தர் மலை என்ற பெயர் இடம்பெற்றிருந்தது என்பதும், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எனவே, அந்தப் பெயர், காலனித்துவ ஆவணங்களில் இருந்தது என்பது, புதிதாகக் கண்டறியப்பட்ட தகவலல்ல. அத்தகைய ஆவணங்களையும் பரிசீலித்த பின்னர் தான், நீதிமன்றம் மலையின் பெயர் தொடர்பான தனது முடிவைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2026ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையைத் தயாரித்தவர்கள், அந்தத் தீர்ப்பை கவனத்தில் கொண்டனரா?

தமிழ் அடையாளமும் அரசின் அணுகுமுறையும்

தமிழின் தொன்மையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்களை உயர்த்திப் பிடிப்பதாகவும் கூறுவது, தமிழக அரசியல் இயக்கங்களின் பொதுவான நிலைப்பாடு. ஆனால், அந்தக் கொள்கை, அரசு ஆவணங்களிலும் பிரதிபலிக்க வேண்டாமா?

ஆங்கிலேயர் கால பெயர்களைப் பதிவு செய்வதில் காட்டப்படும் அக்கறை, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் பெயர்களின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதிலும் காட்டப்பட வேண்டும்.

மதுரையின் அடையாளமான திருப்பரங்குன்றத்திற்கு இந்த அணுகுமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதே, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசிடம் முன்வைக்கப்படும் அடிப்படைக் கேள்வி.

தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பது என்பது, மேடைகளில் பேசுவதோடு முடிந்துவிடுவதல்ல. அரசு ஆவணங்களைத் தயாரிக்கும் முறையிலும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் அது வெளிப்பட வேண்டும்.

அறிக்கை வெளியான நேரம்

இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம் மட்டுமல்ல; அது வெளியான காலகட்டமும் முக்கியமானது.

கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், 2026 நவம்பர் 20 அன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றுவதற்கு இடைக்கால அனுமதி வழங்கியது; அது எதிர்கால வழிபாட்டு உரிமைக்கான முன்னுதாரணமாக அமையாது என்றும் தெளிவுபடுத்தியது.

அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

தீபத்துாண், ஆங்கிலேயர் கால நில அளவைத் துாண் என்ற வாதத்திற்கு ஆதரவாக, இந்த ஆய்வறிக்கை பயன்படுத்தப்பட்டதாக, நவம்பர் 24ம் தேதியிட்ட செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் துாண், நில அளவைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது, ஆய்வுக்குரிய கேள்வி; அது வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது, மற்றொரு வரலாற்று மற்றும் சட்டரீதியான கேள்வி; மலையின் பெயர் என்ன என்பது, முற்றிலும் தனியான கேள்வி.

இந்த மூன்றையும் ஒன்றாகக் குழப்பாமல் அணுக வேண்டியது அரசின் பொறுப்பு.

தமிழக அரசு பதிலளிக்க வேண்டிய ஏழு கேள்விகள்

1 திருப்பரங்குன்றம் என்ற பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டது ஏன்?

2 சிக்கந்தர் மலை என்பது, நில அளவை நிலையத்தின் பெயரா அல்லது ஒட்டுமொத்த மலையின் பெயரா? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?

3 கடந்த, 2025 அக்டோபர் 10ம் தேதி வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு, சமீபத்திய ஆய்வறிக்கை தயாரிப்பின்போது பரிசீலிக்கப்பட்டதா?

4 திருப்பரங்குன்றத்தின் சங்க இலக்கிய மற்றும் தொல்லியல் அடையாளங்கள், பெயரிடும் முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனவா?

5 மலையின் பெயரை மாற்றுவதற்கு ஏதேனும் அரசாணையோ, அரசிதழ் அறிவிப்போ வெளியிடப்பட்டுள்ளதா?

6 ஒரே அறிக்கையின் வெவ்வேறு பக்கங்களில் முரண்பட்ட பெயரிடும் நடைமுறைகள் ஏன் பின்பற்றப்பட்டுள்ளன?

7 ஐந்து தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ள, 1,869 பக்க முழுமையான ஆய்வறிக்கையையும், அதற்கான பெயரிடும் வழிகாட்டுதல்களையும், அரசு, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுமா?

வரலாற்றைப் பதிவு செய்வது வேறு; வரலாற்று அடையாளத்தை மாற்றுவது வேறு!

திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தர்காவின் வரலாற்றையோ, அங்கு வழிபடும் மக்களின் சட்டபூர் வமான உரிமைகளையோ மறுப்பது, இந்த விவாதத்தின் நோக்கமல்ல.

அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அதேபோல், ஓர் இடத்தின் தொன்மையான வரலாற்று அடையாளமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

தமிழக அரசின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பெயரிடும் முறைக்கான காரணம், வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ள குறிப்புகள், தேவையான விளக்கங்களுடன் திருத்தப்பட வேண்டும்.

இன்றைய அரசு ஆவணங்கள் தான் நாளைய தலைமுறையின் ஆய்வுக்கான ஆதாரங்கள்.

எனவே, அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு சொல்லும் வரலாற்றுப் பொறுப்புணர்வுடன் தேர்வு செய்யப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம் என்பது, வெறும் புவியியல் அடையாளமல்ல; அது தமிழ் இலக்கியத்தின், ஆன்மிகத்தின், பண்பாட்டின் தொன்மையான அடையாளம்.

அதன் பெயரைத் தெளிவாகப் பதிவு செய்வது, மதம் சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல; வரலாற்றுத் துல்லியம் சார்ந்த கோரிக்கையும்கூட.

சிந்தனைக்களம்