தங்க நகைகளை விற்றுத் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி
தங்க நகைகளை விற்றுத் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி - காங்கிரஸ் பிரமுகர் மீது டிவி தொகுப்பாளரின் மனைவி புகார்
இரு தரப்பிற்கும் சம்மன் கொடுத்து விசாரணை நடத்திய பிறகு, தவறு இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா சாலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published : November 25, 2026 at 10:40 AM IST
சென்னை: தங்க நகைகளை விற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் 10 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் மீது தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது குரேஷி. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேறு பிரபலமான இவர், தற்போது தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சொந்தமாக டெக்ரேஷன் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28 அன்று அவருக்கு திடீரென அவசர பண தேவை ஏற்படவே, தன்னிடம் உள்ள 92.73 கிராம் தங்க நகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவருடைய பதிவைப் பார்த்த நண்பர் ஒருவர், குரேஷியின் மனைவியை தொடர்புகொண்டு, காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் இதற்கு சரியான ஆள் என்றும், சொன்னால் நல்ல விலைக்கு விற்று தருவார் என்றும் கூறி அவரது செல்போன் எண்ணை பகிர்ந்ததாக தெரிகிறது.
அவர், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரை தொடர்புகொண்டு நகைகளை விற்பது தொடர்பாக பேசியதுடன், 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள 92.73 கிராம் தங்க நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்றுக்கொண்ட ரஞ்சன் குமார், அவற்றை விற்றுவிட்டு வெறும் 4 லட்ச ரூபாயை மட்டும் குரேஷியின் மனைவியிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு பாக்கி பணம் 10 லட்ச ரூபாயை தராமல் இழுத்தடித்து வந்தாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குரேஷியின் மனைவி பலமுறை ரஞ்சன் குமாரை சந்தித்து 10 லட்ச ரூபாயை தருமாறு கேட்டபோதும், அவர் முறையாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் நேற்று (நவ.24) அண்ணா சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள 92.73 கிராம் தங்க நகைகளை விற்று தருவதாகக் கூறி, 4 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு பாக்கி 10 லட்ச ரூபாயை ரஞ்சன் குமார் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணா சாலை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.