அருகி வரும் விளையாட்டு திடல்கள்; பீகாரில் மாநகர பூங்காக்களின் நிலை என்ன?
அருகி வரும் விளையாட்டு திடல்கள்; பீகார் மாநகர பூங்காக்களின் நிலை என்ன?
'தி லாஸ்ட் பிளேகிரவுண்ட்' என்ற பெயரிலான இந்த ஆய்வு, ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் தொடங்கி பீகார் மாநிலத்திலும் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் கயா, புத்த கயா, நாளந்தா, பாட்னா ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.
Published : May 27, 2026 at 9:02 AM IST
பீகார் மாநிலத்தில் மாலை நேரங்களில் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பெற்றோர் அழைத்து வரும் சிறுவர் பூங்காங்களின் நிலை மகிழ்ச்சி அளப்பதாக இல்லை.
நாடு முழுவதும் குழந்தைகளின் பூங்காக்களின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து 'ஈடிவி பாரத்' கள ஆய்வு மேற்கொண்டது. 'தி லாஸ்ட் பிளேகிரவுண்ட்' என்ற பெயரிலான இந்த ஆய்வு, ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் தொடங்கி பீகார் மாநிலத்திலும் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் கயா, புத்த கயா, நாளந்தா, பாட்னா ஆகிய நகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.
உடைந்த ஊஞ்சல்கள், சாய்ந்த மரங்கள், பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள், போதைப்பொருள் பயன்பாடு, சுருங்கி வரும் பசுமை பகுதி ஆகியவை இயல்பாகிவிட்ட சூழலையே பீகாரிலும் பார்க்க முடிகிறது.
கயா நகர பூங்காக்களின் நிலை
கயா நகரில் உள்ள பூங்காக்கள், மக்கள் பூங்காவாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன. இங்குள்ள பூங்காக்களில், சாய்ந்த நிலையில் மரங்கள், உடைந்த ஊஞ்சல்கள், எப்போது விழும் என்ற நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன.
கயா நகரில் உள்ள காந்தி மைதான குழந்தைகள் பூங்காவிற்கு தினமும் 1,500 பேர் வருகிறார்கள். காலையில் பலர் நடைப்பயிற்சிக்கு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருகிறார்கள்.
ஆனால், 11,000 கிலோ வாட் மின்சாரம் செல்லும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மின்கம்பி அறுந்து விழாமல் இருக்க அமைக்கப்பட்ட வலையும் ஆபத்தான நிலையில் உள்ளது. லேசாக காற்று வீசினாலும், சிறிய மழை பெய்தாலும் இங்குள்ள பல பூங்காக்களில் மரங்கள் சாய்ந்து விடுகின்றன.
கயா மாநகராட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. ஆனால், ஒரு பூங்கா கூட ஒரு ஏக்கர் பரப்பளவு கூட இல்லை. பூங்காவுக்கு ஒதுக்கப்படும் இடத்தை பலர் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். எனவே மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவை இங்கு பார்க்க முடியாது என்கிறார்கள் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.
இதை கயா நகரை சேர்ந்த வார்டு கவுன்சிலராக கஜேந்திர சிங்கும் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இங்குள்ள பிரமயோனி மலையில் மிகப்பெரிய பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அந்த பூங்கா அமைந்தால், அதுவே உண்மையான பூங்காவாக இருக்கும். மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். மக்களின் ஆரோக்கியமும் மேம்படும்" என்றார்.
"காந்தி மைதானத்தில் உள்ள பூங்காங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும்படியாக இல்லை. அவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது. தற்போது பூங்காக்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்து விட்டாதால், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்றும் அவர் கூறினார்.
கயா நகரில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் நல்ல நிலையில் இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் லால்ஜி பிரசாத். "மோசமான நிர்வாகத்தால், பல பூங்காக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றன. கயா-பாட்னா சாலையில் கடந்த 2019-20ஆம் ஆண்டில் பல கோடி ரூபாய் செலவில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டது. அந்த பூங்காவில் நிலையில் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளது" என்று அவர் கூறினார்.
"இங்குள்ள ஆசாத் பூங்கா, நகர்ப்புற பூங்காவாக மாறியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, சூதாடுபவர்கள், கஞ்சா புகைப்பவர்கள் ஆகியோர்களின் கூடாரமாக உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்றும் சமூக ஆர்வலர் லால்ஜி பிரசாத் கூறியுள்ளார்.
ஆசாத் பூங்காவில் அமர்ந்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த தீலீப் குமார் என்பவரிடம் கேட்டபோது, "நான் சிறுவயதில் இருந்து இந்த பூங்காவுக்கு வருகிறேன். எதுவும் மாறவில்லை. ஒரு நல்ல பூங்காவுக்கு செல்ல வேண்டும் எனில் புத்த கயாவுக்கு செல்ல வேண்டும். இந்த பூங்கா சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிட்டது" என்றார்.
இருப்பினும் கயா நகரில் உள்ள பூங்காக்களில் குறைபாடுகளை ஒப்புக் கொண்டுள்ள மேயர் கணேஷ் பாஸ்வான், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
புத்த கயா நகரில் பூங்காக்களின் நிலை
கயா நகரை ஒப்பிடுகையில் புத்த கயா நகரில் பூங்காக்கள் அதிகம் உள்ளன. இருப்பினும் ஜெயப்பிரகாஷ் உட்யான் போன்ற பூங்காக்களில் மரங்கள் சாய்ந்து, கவலை அளிக்கும் வகையில் உள்ளன.
கடந்த 13-ஆம் தேதி, மகாபோதி கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த பூங்காவின் ஓரத்தில் இருந்த திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. இருப்பினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, பூங்காவின் ஓரங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயா நகரிலும், புத்த கயா நகரிலும் பல பூங்காக்களின் மதில் சுவர் அருகில் மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்கள் விழுந்தால், மின்சார ஒயர்களும் அறுந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நாளந்தா நகர பூங்காக்களின் நிலை
நாளந்தா நகரில் கடந்த 2010-11இல், 8 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்தது. அவற்றில் 5 பூங்காக்களை வனத்துறை அமைத்துள்ளது.
மற்ற 3 பூங்காக்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையவில்லை. இங்குள்ள திகுலிபர் பகுதியில் 20 லட்சம் செலவில் பூங்கா அமைக்க 2010இல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், காம்பவுண்ட் சுவரும் நடைபாதையும் மட்டுமே கட்டப்பட்டது.
தற்போது அந்த பூங்காவில் கோபுரம் போல் குப்பை கொட்டப்பட்டுள்ளன. ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. இந்த பூங்கா, சமூக விரோதிகளின் கூடரமாக மாறிவிட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவிக்கிறார். எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஆறுதல் அளிக்கும் ஆம்பர் பூங்கா
நாளந்தா நகரில் உள்ள மற்ற பூங்காங்களை போல் அல்லாமல் ஆம்பர் பகுதியில் பூங்கா சற்று ஆறுதலை தருகிறது. இந்த பூங்காவில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பராமரிப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்கள். சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் 200 பேர் வருவதாக பூங்கா மேலாளர் அஜித் குமார் கூறுகிறார்.
சுபாஷ் பூங்கா
கோல்டன் பூங்கா
பாட்னா நகர பூங்காக்களின் நிலை
கயா, நாளந்தா பூங்காக்களை ஒப்பிடுகையில் தலைநகர் பாட்னாவில் உள்ள பூங்காக்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. பல இடங்களில் பூங்காங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன. பாட்னாவில் மொத்தம் 116 பூங்காக்கள் உள்ள நிலையில், அரசுக்கு சொந்தமான காலியிடங்களில் மேலும் பல பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பீகாரில் பூங்காவை நிர்வகிப்பது யார்?
பீகாரில் உள்ள பூங்காங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பூங்கா டிவிசன் அமைக்கப்பட்டு அவற்றின் வசம் பூங்காக்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த பூங்கா டிவிசன்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
"பாட்னா நகரில் பூங்காக்கள் அதிகம் இருந்தாலும் விளையாட்டு மைதானங்கள் குறைவாக உள்ளன. அவற்றை வலுப்படுத்த வேண்டும்" என்று சொல்கிறார் சமூக ஆர்வலர் மிரித்யுஞ்சய் மணி.
தலைநகர் பாட்னாவில் பல பூங்காக்களில் நடைபாதை, நாற்காலிகள், பொழுது போக்கு அம்சங்கள் இருந்தாலும் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் விளையாடுவத்றகு போதிய இடங்கள் இல்லை. எனவே பூங்காக்கள் மட்டுமல்ல திறந்தவெளி மைதானங்களும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாட்னாவில் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் வலுவாக இருந்தபோதிலும், பாதுகாப்பு சற்று குறைவாகவே இருந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், கங்கர்பாக் பூங்காவிற்குள் நுழைந்த கும்பல் நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.
பீகாரின் பூங்கா பராமரிப்பு விதிகள்
ஒரு பூங்காவில் 85 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும்.
சிறிய, பெரிய மரங்கள், மூலிகைத் தாரவங்கள், அலங்கார மலர்ச்செடிகள் இருக்க வேண்டும்.
15 சதவீத இடத்தில் மட்டுமே கட்டடம் கட்டப்பட வேண்டும்.
அந்த 15 சதவீத இடத்தில், நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கருவிகள், நாற்காலிகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் பூங்காக்கள் உணர்த்தும் உண்மைகள்
பீகார் மாநிலத்தின் நகரங்கள் எங்கும் ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. நகர்ப்புறத்தில் உள்ள ஒரு பூங்காவில் நுழையும் குழந்தைகள், அவர்கள் பாதுகாப்பான விளையாடுமிடத்திற்குச் செல்கிறார்களா? அல்லது நவீன நகரத்தின் தரம் குன்றிய பகுதிக்கு செல்கிறார்களா? பீகாரை சேர்ந்த பல குடும்பத்தினருக்கு இந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.