சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்ட பிரபல பவுலர்.. ஐபிஎல் வேண்டாம் என பிஎஸ்எல் தொடரில் இணைந்தார்
சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்ட பிரபல பவுலர்.. ஐபிஎல் வேண்டாம் என பிஎஸ்எல் தொடரில் இணைந்தார்
சென்னை: சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் நேரடியாக இணைந்துள்ளார். இதன் மூலம் அவர் வரவிருக்கும் ஐபிஎல் 2027 ஏலத்தில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான மேட் ஹென்றி, இதுவரை ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
மேட் ஹென்றி 2017-இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2 போட்டிகளிலும், 2024-இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 4 போட்டிகளிலும், 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 3 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ச்சியான உடற்தகுதிப் பிரச்சினைகள் மற்றும் ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிலான செயல்பாடு இல்லாததே அவர் இத்தொடரைப் புறக்கணிக்கக் காரணமாகக் கருதப்படுகிறது.
பிஎஸ்எல் 2027 தொடர் மார்ச் 18 முதல் மே 2 வரை நடைபெறவுள்ளது. 2026-ஆம் ஆண்டில் 8 அணிகளாக விரிவுபடுத்தப்பட்ட பிஎஸ்எல் தொடரின் 12-வது சீசன், ஐபிஎல் தொடரின் 20-வது சீசனுடன் நேரடியாக மோதவுள்ளது. ஐபிஎல் 2027 தொடருக்கான அதிகாரப்பூர்வ தொடக்கத் தேதியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், வழக்கமாக மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்திலேயே இத்தொடர் நடைபெறும்.
முன்னதாக, ஐபிஎல் 2026 தொடருக்கு முன்பாக கிளென் மேக்ஸ்வெல் தனது சுமாரான ஃபார்ம் காரணமாக ஐபிஎல் தொடரைத் தவிர்த்து, பிஎஸ்எல் 2026 தொடரில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2027 ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 28.05 கோடி இருப்புத் தொகையைக் கொண்டுள்ளது. ஏலத்தில் சிஎஸ்கே அணியால் மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் பட்டியல்- மேட் ஹென்றி, மேட் ஷார்ட், ஜாக் ஃபோக்ஸ், குல்தீப் யாதவ், பிரஷாந்த் வீர், மேக்நீல் நோரோன்ஹா, அமன் கான், ஸ்பென்சர் ஜான்சன், ஆகாஷ் மத்வால், டயான் ஃபாரஸ்டர்.